search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரில் கடத்தி வந்த 544 கிலோ குட்கா பறிமுதல்
    X

    காரில் கடத்தி வந்த 544 கிலோ குட்கா பறிமுதல்

    • வாலிபர்கள் 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்
    • பெரியநாயக்கன்பாளையம் முழுவதும் தீவிர ரோந்து சென்றனர்.

    கவுண்டம்பாளையம்,

    கோவை பெரிய நாயக்கன் பாளையம் போலீசாருக்கு அந்த பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் தாமோதரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுக நயினார், ஜெயபிரகாஷ் மற்றும் போலீசார் வீரமணி, பாலசுப்பிரமணி, கோகுலகண்ணன், தனிபிரிவு போலீஸ் கங்காதரவிஜயகுமார் ஆகியோர் பெரிய நாயக்கன் பாளையம் முழுவதும் தீவிர ரோந்து சென்றனர்.

    அப்போது குப்பிச்சிபாளையம் அருகே உள்ள வளம் மீட்பு பூங்கா குப்பை கிடங்கு அருகே ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் 2 கார்கள் இருந்தது. இதனை பார்த்த போலீசார் அதன் அருகே சென்று அங்கிருந்த 3 வாலிபர்களிடம் விசாரித்தனர்.

    அவர்கள் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அங்கிருந்த காரை பரிசோதனை செய்தனர். அதில் காரில் மூட்டை மூட்டையாக ரூ. 5 லட்சம் மதிப்பிலான 544 கிலோ குட்கா இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்து அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். விசாரணையில் அவர்கள் மேட்டுப்பாளையம் பழைய சந்தை ரோட்டை சேர்ந்த முகமது யூசப் (வயது 31), தாசாம்பாளையம் பகுதியை சேர்ந்த தாஜிதின் (42), கருமமேடு தாமஸ் (33) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    இதில் தாஜிதின் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 டன் குட்கா கடத்தி வந்த கும்பலில் இருந்து தப்பிய முக்கிய குற்றவாளி என்பதும், இவர்கள் குட்காவை வடநாட்டில் இருந்து மொத்தமாக வாங்கி வந்து மேட்டுப்பாளையம், காரமடை, பெரிய நாயக்கன் பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் விற்பனைக்கு கொடுத்து வந்ததும் தெரிவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

    Next Story
    ×