search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளச்சந்தையில் ரேஷன் பொருட்களை விற்க முயன்ற 533 பேர் கைது
    X

    கள்ளச்சந்தையில் ரேஷன் பொருட்களை விற்க முயன்ற 533 பேர் கைது

    • அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    • கள்ளச்சந்தை தடுப்பு சட்டத்தின் கீழ் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு பொது வினியோகத்திட்டம் மற்றும் சிறப்பு பொது வினியோகத் திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசிய பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வினியோகிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு வினியோகிக்கப்படும் பொருட்களை சிலர் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருவதாக புகார்கள் வந்தன.

    அதனைத்தொடர்ந்து உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்ற புலனாய்வுத் துறை அலுவலர்கள் தொடர் ரோந்துப் பணி மேற்கொண்டு அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    மேலும் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையா பண்டங்கள் வழங்கல் பராமரிப்பு சட்டம் 1980-ன்படி தடுப்பு காவலிலும் வைக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற 3 லட்சத்து 29 ஆயிரத்து 300 கிலோ அரிசி, 152 எரிவாயு சிலிண்டர்கள், 90 கிலோ கோதுமை, 250 கிலோ துவரம்பருப்பு, 251 லிட்டர் மண்எண்ணெய் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.23 லட்சத்து 61 ஆயிரத்து 969 ஆகும். இந்த குற்றச்செயல்களில் ஈடுபட்ட 529 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

    இதுதவிர கள்ளச்சந்தை தடுப்பு சட்டத்தின் கீழ் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக மேலும் பொதுமக்கள் புகார் அளிக்க 18005995950 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

    Next Story
    ×