search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வள்ளியூர் அருகே 2-ம் கட்ட அகழாய்வில் 450 அரிய வகை பொருட்கள் கண்டெடுப்பு
    X

    அகழாய்வில் கிடைத்த அரிய வகை பொருட்கள்.

    வள்ளியூர் அருகே 2-ம் கட்ட அகழாய்வில் 450 அரிய வகை பொருட்கள் கண்டெடுப்பு

    • நம்பியாற்று பகுதியில் வாழ்வியல் மேடு காணப்படுகிறது.
    • அகழாய்வுக்காக தமிழக அரசு ரூ.15 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

    வள்ளியூர்:

    தமிழர்களின் தொன்மை யான வாழ்வியல் நாகரீகம் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புள்ளது என்பதை உலகறிய செய்யும் வகையில் தமிழகத்தில் 7 இடங்களில் தொல்லியல் அகழாய்வு மற்றும் சங்ககால கொற்கை துறைமுகத்தின் அடையாளம் காண முன்கள புல ஆய்வு செய்யப்படும் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவை கூட்டத்தில் அறிவித்திருந்தார்.

    அதன்படி நெல்லை மாவட்டம் துலுக்கர்பட்டி அருகே கண்ணநல்லூர் கிராமம் செல்லும் சாலையில் நம்பியாற்று பகுதியில் வாழ்வியல் மேடு காணப்படுகிறது. இப்பகுதி விளாங்காடு என்று அழைக்கப்படுகிறது.

    இப்பகுதியில் அகழாய்வு செய்யும் பணியை கடந்த 2021-ம் ஆண்டு சபாநாயகர் அப்பாவு, தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    தமிழ்நாட்டில் 7இடங்களில் அகழாய்வுக்காக தமிழக அரசு ரூ.15 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. துலுக்கர்பட்டியில் நடைபெற்ற முதற்கட்ட அகழாய்வில் செவ் வண்ணம், கருப்பு சிகப்பு வண்ண மட்கல பானை ஓடுகள், பழந்தமிழர் குறியீடுகள், இரும்பு ஆபரணங்கள், கண்ணாடி அணிகலன்கள் உள்ளிட்ட ஆயிரத்து ஒன்பது அரிய தொல்லியல் பொருட்கள் கிடைத்தது.

    மேலும் இப்பகுதியில் வாழ்ந்த தமிழர்கள் வெளி நாட்டினரோடு வணிகம் செய்திருக்கலாம் என்பதற்கான சான்றுகளும் கிடைத்து உள்ளது. பின்னர் 2-ம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த ஏப்ரல் 6-ந்தேதி தொடங்கப்பட்டது. இந்த அகழாய்வில் ஈமத்தாழிகள், ஈட்டி, மோதிரம், அணிகலன்கள் உள்ளிட்ட 450 அரிய வகை தொல்லியல் பொருட்கள் கண்டெடுக்க ப்பட்டுள்ளது. இந்த பொருட்கள் தனித்தனியாக சேகரிக்கப்பட்டு பாதுகாப்பாக பத்திரப்படுத்தப்பட்டுள்ளது.

    இவைகள் அனைத்தும் டெல்லியில் உள்ள தொல்லியல் துறையின் ஆய்விற்கு அனுப்பப்பட உள்ளதாகவும், இப்பகுதி இரும்புகால வாழ்விடப்பகுதியாக கருதப்படுவதால் இன்னும் பல அரிய வகை தொல்லியல் பொருட்கள் கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் தொல்லியல் துறை இயக்குனர் வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×