search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    கத்திமுனையில் மிரட்டி ரியல் எஸ்டேட் அதிபர் காரில் கடத்தல்- 10 பேர் கும்பல் அதிரடி கைது

    மாங்காடு அருகே கத்திமுனையில் மிரட்டி ரியல் எஸ்டேட் அதிபரை காரில் கடத்திய சம்பவம் குறித்து 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
    சென்னை:

    மாங்காட்டை அடுத்த கோவூரில் வசித்து வருபவர் சுரேஷ்குமார். இலங்கையைச் சேர்ந்த இவர் கோவூரில் குடியேறி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

    இவர் கோவூரில் உள்ள தனது வீட்டை விற்பனை செய்வதற்காக ஆன்லைனில் விளம்பரம் செய்திருந்தார். இதனை பார்த்து வீடு வாங்குவது போல 10 பேர் கொண்ட கும்பல் வந்தது.

    நேற்று மதியம் 2 மணி அளவில் சுரேஷ்குமாரின் வீட்டுக்குள் புகுந்த இந்த கும்பல் வீட்டை விலை பேசியது. அப்போது திடீரென 10 பேரும் எழுந்து சுரேஷ்குமாரை மிரட்டி கைகளை பின்னால் கட்டினர். சத்தம் போடாமல் இருப்பதற்காக வாயையும் கட்டி கத்திமுனையில் காரில் கடத்தினர்.

    இதுபற்றி சுரேஷ்குமாரின் உறவினர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீஸ் படை முடுக்கி விடப்பட்டது. ஆவடி கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் மகேஷ் தலைமையிலான 5 தனிப்படையினர் கடத்தப்பட்ட சுரேஷ்குமாரை மீட்க களம் இறங்கினர்.

    எஸ்.ஆர்.எம்.சி. உதவி கமிஷனர் பிரின்ஸ் ஆரோன், பூந்தமல்லி உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி மற்றும் இன்ஸ்பெக்டர்கள் ராஜீவ், சந்திரசேகர், ரவிக்குமார், சிதம்பர முருகேசன், முத்துராமலிங்கம் ஆகியோர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

    கடத்தல் கும்பல் சேலம் மற்றும் சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.

    சுரேஷ்குமாரின் உறவினர் ஒருவர் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களிடம் ரூ.5 கோடி வரையில் ஏமாற்றி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த பணத்துக்காகவே சுரேஷ்குமார் கடத்தப்பட்ட தும் விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து சேலம் மற்றும் சிதம்பரத்தில் அதிரடி வேட்டை நடத்திய போலீசார் ரியல் எஸ்டேட் அதிபர் சுரேஷ்குமாரை இன்று அதிகாலையில் மீட்டனர். 10 பேர் கொண்ட கடத்தல் கும்பலையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். சுரேஷ்குமாரின் உறவினர் ரூ. 5 கோடியை ஏமாற்றி விட்டு தலைமறைவாக உள்ளார். அவரை கண்டு பிடிப்பதற்காக கடத்தல் கும்பல் சுரேஷ்குமாருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து அச்சுறுத்தி வந்துள்ளனர்.

    மாங்காட்டை அடுத்த கோவூரில் உள்ள சுரேஷ்குமாரின் வீட்டை எழுதி தருமாறும் கடத்தல் கும்பல் மிரட்டி வந்துள்ளது. இப்படி கடத்தல் கும்பல் தொடர்ந்து தொல்லை கொடுத்து அச்சுறுத்தி வந்ததால் சுரேஷ்குார் அவர்களுக்கு தெரியாமல் வீட்டை விற்பனை செய்ய முடிவு செய்து அதற்காக ஓ.எல்.எக்சில் விளம்பரம் செய்துள்ளார்.

    இந்த விளம்பரத்தை கடத்தல் கும்பல் பார்த்து விட்டது. தங்களுக்கு தெரியாமல் சுரேஷ்குமார் வீட்டை விற்பனை செய்ய முயற்சி செய்ததை அறிந்தது. ஆத்திரம் அடைந்த கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் வீடு வாங்குவது போல நடித்து சுரேஷ்குமாரின் வீட்டுக்கு வெளிஆட்களை அனுப்பி உள்ளனர்.

    பின்னர் குண்டு கட்டாக காரில் தூக்கி போட்டு கடத்தி உள்ளனர். போலீஸ் விசாரணையில் இது தெரிய வந்துள்ளது.

    கடத்தல் கும்பலிடமிருந்து 2 கார்கள், மிரட்டலுக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதான 10 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.
    Next Story
    ×