என் மலர்
உள்ளூர் செய்திகள்

அம்பத்தூரில் வாலிபர் கடத்தி படுகொலை- தி.மு.க. பிரமுகர் மகன் உள்பட 2 பேர் கைது

அம்பத்தூர்:
அம்பத்தூர் அடுத்த சூரப்பட்டு அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் உதயகுமார் (28). தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மோசஸ் என்பவருக்கும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று இரவு உதயகுமார் மோசசின் வீட்டுக்குச் சென்று அவரது தாயாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மோசஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் 7 பேர் கொண்ட கும்பல் உதயகுமாரை அடித்து அங்கிருந்து கடத்தி சென்று அதே பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து கத்தியால் வெட்டி கொலை செய்தனர்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து அம்பத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த உதவி கமிஷனர் கனகராஜ், இன்ஸ்பெக்டர் ராமசாமி ஆகியோர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர்.
போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உதயகுமாருக்கு, மோசசுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது தெரியவந்தது. அதன் காரணமாக இந்த கொலை நடந்து இருக்கலாமா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் விசாரணை செய்துவருகின்றனர்.
இக்கொலை சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த தி.மு.க. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் மகன் சரண், அவரது நண்பர் அப்புன், ஆகியோரை கைது செய்துள்ள போலீசார் தலைமறைவாக உள்ள மோசஸ் மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.