search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அன்புமணி ராமதாஸ்
    X
    அன்புமணி ராமதாஸ்

    அன்புமணி பா.ம.க. தலைவர் ஆகிறார்- நாளை பொதுக்குழுவில் முடிவு

    பொதுக்குழுவின் ஏகோபித்த முடிவின்படி அன்புமணி மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு நாளை முறைப்படி அறிவிக்கப்படுவார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
    சென்னை:

    பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் நாளை (சனிக்கிழமை) திருவேற்காட்டில் நடைபெறுகிறது. டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த பொதுக்குழுவில் அன்புமணி பா.ம.க. தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளார். எனவே இந்த பொதுக்குழு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    1989-ம் ஆண்டு டாக்டர் ராமதாஸ் பா.ம.க.வை தொடங்கினார். சமூக பிரச்சினைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தும் போராட்டங்களை நடத்தியும் வருகிறது.

    மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்ற யெரில் 2016 சட்டமன்ற தேர்தலில் தனித்து களம் கண்டும் வெற்றி பெற முடியவில்லை.

    இளைஞர் அணி தலைவராக இருக்கும் அன்புமணி எம்.பி. மத்திய சுகாதார மந்திரியாக இருந்தபோது நாடு முழுவதும் சுகாதார திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி பெயர் பெற்றார்.

    சமீப காலமாக அன்புமணியின் ‘ஹைடெக்’ தேர்தல் பிரசாரங்களும், புள்ளி விவர பேச்சுக்களும் அரசியல் அரங்கில் அவரை பேச வைத்துள்ளது.

    தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் வகையில் பல்வேறு வியூகங்களை டாக்டர் ராமதாஸ் மற்றும் மூத்த நிர்வாகிகள் வகுத்து செயல்படுத்தி வருகிறார்கள். அதில் ஒரு பகுதியாக அன்புமணி ராமதாஸ் தலைமையில் 20 மாவட்டங்களில் பா.ம.க. பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. பா.ம.க.வின் முக்கிய அடையாளமாக உருவெடுத்துள்ள அன்புமணியை கட்சியின் தலைவராக்கி தேர்தலை சந்தித்தால் ஆட்சியை பிடிப்பது எளிது என்று பா.ம.க.வின் அனைத்து மட்டத்திலும் கருத்து நிலவுகிறது. தொடர்ந்து நிர்வாகிகளும் டாக்டர் ராமதாசிடம் வலியுறுத்தி வருகிறார்கள்.

    அன்புமணியின் செயல்பாட்டை கடந்த சில ஆண்டுகளாகவே கவனித்து வந்த டாக்டர் ராமதாஸ் திருப்தி அடைந்த நிலையில் இப்போதுதான் சம்மதம் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.

    இதனால் பா.ம.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். நாளை நடைபெறும் சிறப்பு பொதுக்குழுவில் அன்புமணிக்கு தலைவர் பதவி என்பதே முக்கிய தீர்மானமாக கொண்டு வரப்பட உள்ளது.

    பொதுக்குழுவின் ஏகோபித்த முடிவின்படி அன்புமணி மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு நாளை முறைப்படி அறிவிக்கப்படுவார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×