search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது செய்யப்பட்ட 3 பேர்
    X
    கைது செய்யப்பட்ட 3 பேர்

    கோவில் திருவிழாவில் முதல் மரியாதை கிடைக்காததால் கொன்றோம்

    மதுரை ஊராட்சி செயலர் கொலையில் கோவில் திருவிழாவில் முதல் மரியாதை கிடைக்காததால் கொன்றோம் கைதானவர்கள் வாக்கு மூலம்.
    மதுரை

    மதுரை வரிச்சியூர் அடுத்த தட்சனேந்தல் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது52) இவர்இடைய பட்டி ஊராட்சி செயலாளராகவும், கருப்புக்கால் காளியம்மன் கோவில் பூசாரியாகவும் இருந்து வந்தார். 

    இந்த நிலையில் லட்சுமணனை நேற்று அதிகாலை 3 பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. இதுதொடர்பாக கருப்பாயூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.   

    லட்சுமணன் மனைவி வள்ளியிடம் விசாரணை செய்த போது, “நான் நேற்று காலை வீட்டில் இருந்தேன். அப்போது எனது கணவர் அரிவாள் வெட்டு காயங்களுடன் கிடப்பதாக தகவல் கிடைத்தது. 

    இதனையடுத்து நான் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றேன். அப்போது எனது கணவர்   வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். அவரிடம் ‘உங்களை யார் வெட்டியது?’ என்று கேட்டேன். 

    அதற்கு அவர் கணேசனின் மகன்கள் சரத்குமார், சிங்கராஜ் மற்றும் மணிகண்டன் ஆகிய 3 பேரும் தன்னை சரமாரியாக வெட்டியதாக தெரிவித்து மயங்கி விழுந்தார்.
     
    நாங்கள் அவரை உடனடியாக மீட்டு, மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றோம். ஆனாலும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து விட்டார் என்றார்.
    இதுபற்றி கருப்பாயூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் 3 பேரையும் தேடி வந்தனர்.

    இதில் 3 பேரும் கருப்பாயூரணி பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அவர்களை போலீசார்   சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். 
    பின்னர் கைதான 3 பேரும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தனர்.அப்போது அவர்கள் கூறியதாவது:- 

    இடையப்பட்டி ஊராட்சி செயலாளராக இருந்த லட்சுமணன், கருப்புக்கால் காளியம்மன் கோவிலில் பூசாரியாகவும் இருந்து வந்தார். எனவே அவருக்கு கோவிலில் பாரம்பரிய வழக்கப்படி முதல் மரியாதை தரப்பட்டு வந்தது. இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். 

    இதையடுத்து ஊர் கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது  லட்சுமணன் இருக்கும் வரை, அவருக்குத்தான் கோவிலில் முதல் மரியாதை என்று ஊர் பெரியவர்கள் தெரிவித்தனர். எனவே நாங்கள் அவரை கொலை செய்ய  முடிவு செய்தோம்.

    அவர் தினமும் காலை நேரத்தில் கருப்புக்கால் கோவிலுக்கு  செல்வது வழக்கம். எனவே நாங்கள் தச்சனேந்தல் ரோட்டில்  ஆயுதங்களுடன் தயாராக இருந்தோம். அப்போது லட்சுமணன் மோட்டார் சைக்கிளில் வந்தார்.  அவரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டோம். அப்போது அவர் எங்களை அடிக்க பாய்ந்தார். இதனால் ஆத்திரமடைந்த நாங்கள் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்று விட்டோம். 

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    Next Story
    ×