search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கமல்ஹாசன்
    X
    கமல்ஹாசன்

    கட்சியினர் ஓட்டம்.... கையிலும் காசு இல்லை... மக்கள் நீதி மய்யம் தள்ளாட்டம்

    தமிழக அரசியல் களத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் காலங்களில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுக்கும் என்று அக்கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
    திராவிட கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு நாங்களே மாற்று என்கிற கோஷத்துடன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய கமல்ஹாசன் ஆரம்பத்தில் அரசியலில் அதிரடி காட்டினார். பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என அனைத்து வகையான தேர்தல்களையும் எதிர்கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வெற்றி என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.

    சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் வெற்றியின் விளிம்பு வரை சென்று கோட்டை விட்டார். அரசியல் களத்தில் வெற்றி என்பது வாழைப்பழத்தை உரித்து சாப்பிடுவது போல அல்ல என்பதை கமல்ஹாசன் நன்றாகவே உணர்ந்துள்ளார். ஆனால் கமல் கட்சியில் இணைந்து பணியாற்றிய நிர்வாகிகள் பலர், வேறு மாதிரி கணக்கு போட்டனர். கருணாநிதி, ஜெயலலிதா இருவரும் இல்லாத நிலையில் தமிழக மக்கள்,
    மக்கள் நீதி மய்யம்
    கட்சிக்கு நிச்சயம் உடனே சிவப்பு கம்பளத்தை விரித்து விடுவார்கள் என்று கனவு கண்டனர். அந்த கனவு பலிக்காததால் கமல்ஹாசன் கட்சியில் இருந்து முன்னணி நிர்வாகிகள் ஓட்டம் பிடித்தனர். மாநில நிர்வாகிகள் பலர் மாற்று கட்சிகளில் போய் தஞ்சம் புகுந்தனர்.

    பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் கோட்டை விட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றியை ஈட்டாததால் கட்சிக்குள் கடும் புகைச்சல் ஏற்பட்டது.

    இதனால் “எங்கே போகும் இந்த பாதை...” என்கிற மனநிலைக்கு கட்சியினர் தள்ளப்பட்டுள்ளனர்.

    இப்படி தொடர் தோல்விகளால்
    மக்கள் நீதி மய்யம்
    கட்சியில் இருந்து பலரும் விலகி ஓடி இருக்கும் நிலையில் மிச்சம் மீதி இருக்கும் கட்சியினரும் இங்கேயே இருக்கலாமா? இல்லையென்றால் வேறு கட்சிகளில் போய் சேர்ந்து விடலாமா? என்கிற எண்ணத்திலேயே காலத்தை தள்ளிக்கொண்டு சோர்ந்து போய் காணப்படுகிறார்கள்.

    இதனால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் எதிர்காலம் என்ன? என்பது மிகப்பெரிய கேள்வியாகவே உருவெடுத்துள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து இதுபோன்று நிர்வாகிகள் பலர் ஓட்டம் பிடித்ததால் கமல்ஹாசன் மக்கள் செல்வாக்கை பெறுவதற்கு புதிய வியூகம் ஒன்றை வகுத்தார்.

    இதன்படி மாவட்ட செயலாளர்கள் பொறுப்பில் இருந்து கட்சியை வழி நடத்தி செல்ல ஆட்கள் தேவை என்கிற விளம்பரம் செய்யப்பட்டது. ஆனால் இதனை மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

    இதனால் காலியாக உள்ள மாவட்ட செயலாளர் பணி இடங்களுக்கு ஆட்களை தேடும் படலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இப்படி கட்சியின் கூடாரம் காலியாகி கொண்டிருக்கும் நிலையில் நிதி நெருக்கடியும் மக்கள் நீதி மய்யம் கட்சியில் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. பெரிய தொழில் அதிபர்கள், வர்த்தக நிறுவனங்கள் ஆகியவற்றில் பெரும்பாலான கட்சிகள் நிதி வசூல் செய்தே கட்சியை வழி நடத்தி வருகின்றன. ஆனால் கட்சி தொடங்கியதுமே
    கமல்ஹாசன்
    , அது போன்று நாமும் செயல்படக்கூடாது என்று கட்டளையிட்டார். ஆனால் கட்சி நிர்வாகிகள் சிலரோ நாமும் நன்கொடை என்ற பெயரில் பெரிய அளவில் நிதி வசூலில் இறங்கினால் மட்டுமே கட்சியை நடத்த முடியும் என்கிற கருத்தை முன் வைத்திருக்கிறார்கள்.

    ஆனால் கமல்ஹாசனோ அதற்கு சம்மதிக்கவில்லை. அப்படி செயல்பட்டால் மற்ற கட்சிகளுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விடும் என்றும், மாற்றத்துக்கான கோஷத்தை நம்மால் எப்படி முன்னெடுத்துச் செல்ல முடியும் என்றும் கண்டித்துள்ளார்.

    கட்சிக்கு வரும் பணத்துக்கு உரிய கணக்கு காட்ட வேண்டும் என்றும் அதுதான் நேர்மையான அரசியலாக இருக்கும் என்றும்
    கமல்ஹாசன்
    தெள்ளத் தெளிவாக கூறி இருக்கிறார். இதைத் தொடர்ந்தே மக்களிடம் வெளிப்படையாக வங்கி கணக்கை தெரிவித்து நிதி திரட்டலாம் என்று திட்டமிடப்பட்டது.

    இதன்படி கட்சிக்கு நிதி தாருங்கள் என்று கமல்ஹாசனே வெளிப்படையாக அறிவிப்பு வெளியிட்டார்.

    மக்களிடம் நிதி திரட்டி கட்சியை வழி நடத்த திட்டமிட்ட மக்கள் நீதி மய்யத்தின் இந்த வியூகமும் பெரிதாக கை கொடுக்கவில்லை.

    இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில நிர்வாகி ஒருவர் கூறும்போது, எங்கள் தலைவரை பொருத்தவரையில் எதிலும் நியாயமாக செயல்பட வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர். இதன் காரணமாகவே கட்சிக்கு யாரிடமும் நிதி வசூலில் ஈடுபட வேண்டாம் என்று சொல்லி விட்டார். தனது வருமானத்தை வைத்தே அவர் கட்சியை நடத்தி வருகிறார் என்று பெருமையுடன் குறிப்பிட்டார்.

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகளே இருக்கும் நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு புத்துயிர் ஊட்டி வலுவான கட்சியாக மாற்ற கமல்ஹாசனும், கட்சி நிர்வாகிகளும் காய் நகர்த்தி வருகிறார்கள். இதற்காக விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கிராமப்புறங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு அடித்தளம் இல்லை.

    அதே நேரத்தில் நகர்புறங்களிலும் வலுவான அடித்தளம் அமையவில்லை. இதைத் தொடர்ந்து இந்த கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

    தொடர் தோல்விகள், கட்சியினர் ஓட்டம், கட்சி நிதி நெருக்கடி என தள்ளாடிக் கொண்டிருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியை தூக்கி நிறுத்துவதற்கு கமல்ஹாசன் நிறைய திட்டங்களை கைவசம் வைத்துள்ளார் என்றும் அதன் மூலம் தமிழக அரசியல் களத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் காலங்களில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுக்கும் என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    இவர்களின் எண்ணத்துக்கு ஏற்ப கமல்ஹாசன், கட்சிக்கு புத்துயிர் ஊட்டி, வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


    Next Story
    ×