search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வண்ணார்பேட்டை மேம்பாலம் பஸ் நிறுத்தம் பகுதியில் தற்காலிக கழிப்பிடம் அமைக்கப்படுமா?-பொதுமக்கள் கோரிக்கை

    வண்ணார்பேட்டை மேம்பாலம் பஸ் நிறுத்தம் பகுதியில் தற்காலிக கழிப்பிடம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து கொண்டே செல்கிறது.

    டவுன், வண்ணார் பேட்டை, பாளை, சமாதானபுரம் உள்ளிட்ட இடங்களில் ஆக்கிரமிப்புகள் காரணமாக போக்குவரத்து நெரிசலில் வாகன ஓட்டிகள் சிக்கித் தவிக்கின்றனர்.

    அதேநேரத்தில் வண்ணார்பேட்டை செல்லபாண்டியன் மேம்பாலம் பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதியாக உள்ளது.

    இங்கு தினமும் பணி நிமித்தமாகவும் பல்வேறு காரணங்களுக்காகவும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ஆனால் அவர்களுக்கு மேம்பாலம் பகுதியில் கழிப்பிட வசதி இல்லாமல் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர்.

    வண்ணார்பேட்டை மேம்பாலத்திற்கு கீழே பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட்ட உடனேயே இது தொடர்பான கோரிக்கை வைக்கப்பட்டது.

    இதையடுத்து மாநகராட்சி சார்பில் மேம்பாலத்தின் அருகே தற்காலிகமாக கழிப்பிடம் அமைக்கப்பட்டது.

    ஆனால் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் கழிப்பிடத்தில் இருந்து வெளியேறும் சிறுநீர் சாலைகளில் ஓடியது. தற்போது அந்த தற்காலிக கழிப்பிடத்தை பொதுமக்கள் யாரும் பயன்படுத்தவில்லை.

    ஆனால் அதன் பின்னர் வேறு தற்காலிக கழிப்பிடம் அமைக்கப்படாததால் பஸ் ஏறுவதற்கு வரும் பயணிகள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர்.

    இதேபோல் அங்கு காவல் பணியில் ஈடுபடும் போலீசாரும் கழிப்பிடம் செல்லமுடியாமல் சிரமம் அடைகின்றனர். குறிப்பாக பெண் பயணிகள் அதிக அளவில் சிரமம் அடைகின்றனர்.

    எனவே மாநகராட்சி நிர்வாகம் அந்த பகுதியில் தற்காலிக கழிப்பிடங்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
    Next Story
    ×