என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பாஜக நிர்வாகி - கொலை செய்யப்பட்ட இடம்
  X
  பாஜக நிர்வாகி - கொலை செய்யப்பட்ட இடம்

  உறவினர்களிடம் துணிச்சலாக சவால் விட்டு பா.ஜ.க. நிர்வாகியை கொன்ற 3 ரவுடிகள்- அதிர்ச்சி தகவல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாஜக நிர்வாகியை மிரட்டியது தொடர்பாக ரவுடி பிரதீப் மீது சில தினங்களுக்கு முன்னர் சிந்தாதிரிப்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
  சென்னை:

  சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பா.ஜனதா எஸ்.சி. பிரிவு மாவட்ட தலைவரான பாலச்சந்தர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

  பாலச்சந்தருக்கு மர்ம நபர்களால் கொலை மிரட்டல் உள்ளிட்ட அச்சுறுத்தல்கள் இருந்து வந்தன. இதன் காரணமாக அவர் போலீசில் புகார் அளித்திருந்தார். இதைத் தொடர்ந்து பாலச்சந்தருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பாலச்சந்தர் எங்கு சென்றாலும் உடன் சென்று வந்தனர்.

  கீழ்ப்பாக்கம் பகுதியில் வசித்து வரும் பாலச்சந்தரின் பூர்வீகம் சிந்திரிப்பேட்டை என்பதால் அவர் அடிக்கடி அங்கு சென்று நண்பர்கள், உறவினர்களை பார்த்து பேசி விட்டு வருவார். இதே போன்று நேற்று இரவு நண்பர்களை சந்திப்பதற்காக பாலச்சந்தர் சிந்தாதிரிபேட்டைக்கு சென்றிருந்தார்.

  சிந்தாதிரிப்பேட்டை சாமி நாயக்கன் தெருவில் உள்ள ஹார்டுவேர்ஸ் கடை முன்பு இரவு 8 மணி அளவில் பாலச்சந்தர் நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்தார். அப்போது பாதுகாப்பு காவலரான பாலகிருஷ்ணன் அருகில் உள்ள கடைக்கு டீ குடிக்க சென்றிருந்தார்.

  இந்த நேரத்தில் 3 பேர் கொண்ட கும்பல் திடீரென பா.ஜனதா நிர்வாகியான பாலச்சந்தரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியது. அவர்களிடமிருந்து தப்பிக்க பாலச்சந்தர் முயன்றார். ஆனால் 3 பேரும் பாலச்சந்தரை தப்பவிடாமல் சூழ்ந்து கொண்டு வெட்டி சாய்த்தனர்.

  இதில் உடலில் பல இடங்களில் பாலச்சந்தருக்கு வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த பாலச்சந்தர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். அவரை வெட்டி கொன்ற 3 பேரும் தப்பி ஓடி விட்டனர்.

  இந்த கொலை சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த நேரத்திலேயே கொலையாளிகள் மிகவும் துணிச்சலாக பாலச்சந்தரை வெட்டிக்கொன்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விரைந்து சென்று பாலச்சந்தரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால், கூடுதல் கமிஷனர் அன்பு ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

  கொலையாளிகளை பிடிக்க உடனடியாக போலீசார் முடுக்கி விடப்பட்டனர். திருவல்லிக்கேணி துணை கமிஷனர் பகலவன் தலைமையில் கொலை சம்பவம் பற்றி துப்பு துலக்குவதற்காக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் கொலைக்கான காரணம் என்ன? என்பது பற்றியும், கொலையாளிகள் யார்? என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் பாலச்சந்தரை கொலை செய்தவர்கள் யார்? என்பது அடையாளம் தெரிந்தது.

  சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த ரவுடி பிரதீப் தனது கூட்டாளிகளான சஞ்சய், கலைவாணன் ஆகியோருடன் சேர்ந்து திட்டம் போட்டு போலீஸ் பாதுகாப்பையும் மீறி இந்த கொலையை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கொலையுண்ட பாலச்சந்தரின் சகோதரி அளித்த புகாரின் பேரில் 3 பேர் மீதும் சிந்தாதிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாலச்சந்தரின் சகோதரர் ஒருவர் சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் துணிக்கடை நடத்தி வருகிறார்.

  இந்த கடைக்கு பிரதீப் அடிக்கடி சென்று மாமூல் கேட்டுள்ளார். இதுபற்றி தெரியவந்ததும் பாலச்சந்தர் அதனை தட்டிக்கேட்டுள்ளார். மாமூல் கேட்டு மிரட்டல் விடுத்த பிரதீப் மற்றும் அவனது கூட்டாளிகள் மீது போலீசில் புகார் அளிக்க வைத்துள்ளார்.

  இந்த வழக்கில் போலீசார் பிரதீப்பை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பிரதீப் மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் அடிக்கடி அவனை கைது செய்து சிறையில் அடைத்து வந்துள்ளனர்.

  சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரதீப் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தான் வெளியில் வந்துள்ளான். நேராக பாலச்சந்தரின் சகோதரர் துணிக்கடைக்கு சென்று அவன் உறவினர்களிடம் சண்டை போட்டுள்ளான். பாலச்சந்தர் என்னை வெளியில் நடமாட விடுவது இல்லை. என் வழியில் குறுக்கிட்டு கொண்டே இருக்கிறார். அவரை கொல்லாமல் விடமாட்டேன் என்று எச்சரித்துள்ளார்.

  இப்படி ரவுடி பிரதீப் சபதம் போட்டு பாலச்சந்தரை தீர்த்துக் கட்டி இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

  இந்த மிரட்டல் தொடர்பாக பிரதீப் மீது சில தினங்களுக்கு முன்னர் சிந்தாதிரிப்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்கும் போட்டுள்ளனர்.

  இந்த நிலையில்தான் பாலச்சந்தரை திட்டம் போட்டு, போலீசுக்கு சவால் விடும் வகையில் ரவுடிகள் தீர்த்து கட்டியுள்ளனர்.

  பிரதமர் மோடி நாளை சென்னை வரும் நிலையில் நடைபெற்றுள்ள இந்த கொலை சம்பவம் போலீசார் மத்தியிலும் பாரதிய ஜனதா கட்சியினரிடையேயும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  சென்னையில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் கொலை சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து போலீசார் இதில் கூடுதல் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கை வலுப் பெற்றுள்ளது.  Next Story
  ×