search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருணாம்பிகா  எம்.வி.ராமசாமி
    X
    கருணாம்பிகா எம்.வி.ராமசாமி

    உள்நாட்டு வர்த்தகர்களுக்கும் வரிச்சலுகை வழங்க வேண்டும் - திருப்பூர் ரைசிங் சங்கம் கோரிக்கை

    இந்த மாதமும் திடீரென கிலோவுக்கு ரூ.40 என நூல் விலையில் உயர்வு ஏற்பட்டது.

    திருப்பூர்:

    நூல் ஏற்றுமதி வரிச்சலுகையை உள்நாட்டு வர்த்தர்களுக்கும் வழங்கினால் நூல் தட்டுப்பாடு பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு காணலாம் என்று திருப்பூர் ரைசிங் சங்கம் யோசனை தெரிவித்துள்ளது. இது குறித்து திருப்பூர் ரைசிங் சங்க உரிமையாளர்கள் சங்கத்தலைவர் கருணாம்பிகா எம்.வி.ராமசாமி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:-

    பின்னலாடை ஏற்றுமதி நகராக விளங்குவதோடு மட்டுமின்றி, சுமார் 15 லட்சம் குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கும் திருப்பூர், தற்போது நூல் விலை உயர்வு, பஞ்சு தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகளால் தவித்து வருகிறது.

    இது தொடர்பான அடையாள உற்பத்தி நிறுத்தம், கண்டன ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதப் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், மத்திய அரசு வெளிநாட்டு இறக்குமதி நூலுக்கு வரிச்சலுகையை அறிவித்தது. அதை தொழில் துறையினர் மகிழ்ச்சியுடன் வரவேற்றோம்.

    மீண்டும் இந்த மாதமும் திடீரென கிலோவுக்கு ரூ.40 என நூல் விலையில் உயர்வு ஏற்பட்டது. பஞ்சிற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 5பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு முன்னிலையில் ஆலோசனை நடத்தப்பட்டு, மத்திய மாநில அரசு அதிகாரிகள், மத்திய நிதி அமைச்சர், ஜவுளி அமைச்சர்களை சந்தித்து முறையிட தீர்மானிக்கப்பட்டது.

    இந்நிலையில் மத்திய அரசு ஜவுளித்தொழிலை பாதுகாக்கும் விதமாக, ‘இந்திய பருத்தி கவுன்சில்’ அமைப்பை ஏற்படுத்தியு–ள்ளது. பஞ்சு, நூல் விலை நிர்ணயம் தொடர்பான சிக்கல்களை தீர்க்க இந்த குழு நிச்சயம் உதவிகரமாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை என்பதாலும், தொழில் துறையினரின் கோரிக்கையை ஏற்று, தாமதம் செய்யாமல் உடனடியாக கவுன்சில் அமைத்து எங்களுக்கு நிம்மதியை தந்துள்ளது என்பதாலும் திருப்பூர் சார்பாக எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

    மேலும் தற்போது நூல் ஏற்றுமதிக்கு டிராபேக் வரிச்சலுகை 1.9சதவீதம் உள்பட மொத்தம் 5.8சதவீதம் ஏற்றுமதி வரிச்சலுகை-யாக வழங்கி வருகிறது. இந்த கோரிக்கை இந்த 2022ம் ஆண்டு ஜனவரியில் தான் கோரப்பட்டது.

    ஆனால் மத்திய அரசு இந்த சலுகையை கடந்த 2021ம் ஆண்டில் இருந்தே பெற்றுக்கொள்ள வழிவகை செய்து விட்டது. இது நூல் ஏற்றுமதி வர்த்தர்களுக்கு சாதகமாக இருந்தாலும், உள்நாட்டில் தேவைப்படும் நூலுக்கு தட்டுப்பாடு பிரச்சினையை உருவாக்கிவிட்டது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

    இந்த பிரச்சினையை தீர்க்க உள்நாட்டு வர்த்தகத்திற்கும் இந்த 5.8சதவீதம் ஊக்கச்சலுகையை மத்திய அரசு வழங்கி உதவினால், இந்தியாவில் நூல் தட்டுப்பாடு பிரச்சினைக்கு தற்காலிக தீர்வை ஏற்படுத்த முடியும். குறிப்பாக ஏற்றுமதியாளர்களுக்கு மட்டுமே இதுவரை ஊக்கச்சலுகை வழங்கப்பட்டு வருகிறது.

    தற்போது நூல் விலை உயர்வு, தட்டுப்பாடு பிரச்சினையை கவனத்தில் கொண்டு, உள்நாட்டு வர்த்தகர்களுக்கும், நூல் மில்களுக்கும் இந்த சலுகையை இடைக்கால நிவாரணமாக கருதி வழங்கிட வேண்டும். இதன்மூலம் உள்நாட்டு வர்த்தகத்தில் சலுகை கிடைப்பதால், இந்தியாவில் நூல் தட்டுப்பாடு நீங்கிவிட வாய்ப்புள்ளது.

    அதேபோல் 100நாட்கள் வேலை திட்டத்தில், விவசாயத்திற்கு உதவும் வகையில் அவர்களுக்கு வழிகாட்டி, வலியுறுத்திட மத்திய அரசு முன்வர வேண்டும். இதன்மூலம் மனிதவளம் வீணடிக்கப்படாமல் விவசாயத்திற்கு முழுமையான பலன் கிடைக்கும். விவசாயிகளுக்கும் பக்க பலமாக அமையும்.

    நாடெங்கும் தரமான விதைகள் மூலம் பருத்தி விளைச்சல் சமயத்தில், 100நாள் வேலைத்திட்டத்தில் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு இருக்கும்போது, விவசாயிக்கும், விசாயத்திற்கும், ஜவுளித்தொழிலுக்கும் சிறப்பான வளர்ச்சி கிடைக்கும் என்பது உறுதி. இதன்மூலம் நம்நாட்டு தேவைக்குப்போக மீதமிருக்கும் பருத்திகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம்.

    எனவே மத்திய அரசு இந்த விஷயத்தில் சற்று தீவிர கவனம் செலுத்தி, ஜவுளித்தொழில் துறையினருக்கு தங்கு தடையின்றி நூல் கிடைக்க ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×