search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை சித்திரை திருவிழா கல்வெட்டு
    X
    மதுரை சித்திரை திருவிழா கல்வெட்டு

    மதுரை சித்திரை திருவிழா கல்வெட்டு கண்டுபிடிப்பு

    திருமலை நாயக்கர் மன்னர் ஆட்சி காலத்தில் மதுரை சித்திரை திருவிழாவிற்கு திரி எடுத்து செல்லப்பட்டது பற்றிய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா வேலூர் திடல் பகுதியில் எழுத்துக்கள் பொறித்த கல் ஒன்று இருப்பதாக வேலூரை சேர்ந்த மலையாண்டி என்பவர் கொடுத்த தகவலின்படி பாண்டியநாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர்கள் மீனாட்சிசுந்தரம், தாமரைக்கண்ணன் மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் மேற்பரப்பு ஆய்வு செய்தனர்.

    இதை பற்றி அவர்கள் கூறியதாவது:-

    இந்த கல் மூன்று அடி உயரமும் 1¼ அடி அகலமும் உள்ளது. அக்கல்லில் அழகர் திரு அனல் ஆட்டம் வளூர் என்று 4 வரி மட்டும் எழுதப்பட்டு உள்ளது. நான்கு புறமும் சக்கரம் கோட்டோவியமாக இடம்பெற்றுள்ளது. தற்போது வேலூர் என அழைக்கப்படும் இந்த ஊர் முன்பு வளூர் என அழைக்கப்பட்டு வந்திருக்கலாம் என தெரிகிறது.

    மதுரையை ஆட்சி செய்த திருமலை நாயக்கர் மன்னர் காலத்தில் சைவம், வைணவம் இடையே இருந்த பிரச்சினைகளை தீர்க்கும் விதமாக, ஒற்றுமையாக கொண்டாட உருவாக்கப்பட்ட திருவிழா சித்திரை திருவிழா. இந்த சித்திரை திருவிழா நிகழ்வாக சொக்கர் மீனாட்சி திருக்கல்யாணம், அழகர் ஆற்றில் இறங்குதல் போன்ற நிகழ்வில் சைவ, வைணவ இணைப்பு திருவிழாவாக திருமலை நாயக்கர் நடைமுறைப்படுத்தி, இத்திருவிழா 12 நாட்கள் வரை நடைபெறும் விதமாக ஆணையிட்டு விழாவினை நடத்தி வந்துள்ளார்.

    இவ்வாறு நடைபெற்ற சித்திரை திருவிழாவிற்கு திரி எடுத்தல் அதாவது திரு அனல் ஆட்டம் என்று சொல்லக்கூடிய நேர்த்திக்கடன் செலுத்தும் வழக்கம் இருந்து வந்துள்ளது. மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தும் மற்ற தென் மாவட்டங்களில் இருந்தும் இந்த திரு அனல் ஆட்டம் என்று சொல்லக்கூடிய திரி எடுத்து ஆடி சித்திரை திருவிழாவிற்கு பக்தர்கள் வருவதும் வழக்கமாக இருந்துள்ளதை மெய்பிக்கும் வகையில் இந்த வேலூர் கல்வெட்டு அமைந்துள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர்கள் இதை கடவுளாக வழிபட்டு வருகின்றனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.


    Next Story
    ×