search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மரம் முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு
    X
    மரம் முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு

    நாகர்கோவிலில் இன்று 6 மணி நேரம் இடைவிடாது கொட்டிய கனமழை- மரம் முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு

    பேச்சிப்பாறை அணை நிரம்பி வருவதையடுத்து அணையின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    கேரளாவில் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக கேரளாவை ஒட்டியுள்ள குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    நேற்றிரவு மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. நாகர்கோவிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு லேசாக மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல மழையின் வேகம் அதிகரித்தது. தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்தது. 6 மணிநேரத்திற்கு மேலாக மழை நீடித்தது. தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.

    இதனால் பள்ளி சென்ற மாணவ-மாணவிகள் குடை பிடித்தவாறு சென்றனர். தனியார் நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு வந்த ஊழியர்கள் மழையில் நனைந்து பரிதவிப்பிற்கு ஆளானார்கள். நாகர்கோவிலில் கொட்டி வரும் மழையினால் பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட கோட்டார் சாலை சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. அந்த சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி உள்ளதால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

    கன்னியாகுமரி பகுதியில் இன்று காலை முதலே வானத்தில் கருமேகங்கள் திரண்டு இருந்ததால் சூரிய உதயத்தை பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். அங்கும் சாரல் மழை பெய்த தையடுத்து கடற்கரைச் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

    ஆரல்வாய் மொழி, குருந்தன்கோடு, மயிலாடி, பூதப்பாண்டி, சுருளோடு, இரணியல் அடையாமடை, சுசீந்திரம், கோழிப்போர்விளை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் இன்று காலை முதலே மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து குளிர் காற்று வீசி வருகிறது.

    திற்பரப்பு அருவி பகுதியிலும் கொட்டி தீர்த்து வரும் கனமழையின் காரணமாக அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள்.

    மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் கனமழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 36.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு பகுதிகளிலும் மழை நீடித்து வருவதை அடுத்து அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    பேச்சிப்பாறை அணை நிரம்பி வருவதையடுத்து அணையின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 42.94 அடியாக இருந்தது. அணைக்கு 596 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 43.55 அடியாக இருந்தது. அணைக்கு 184 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றாறு1 அணையின் நீர்மட்டம் 10.56 அடியாகவும் சிற்றார்2 அணை நீர்மட்டம் 10.66 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 17.90 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 16.81 அடியாகவும் உள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

    பேச்சிப்பாறை23.2, பெருஞ்சாணி11, சிற்றாறு120.2, மாம்பழத்துறையாறு17.2, புத்தன் அணை9.8, நாகர் கோவில்16.4, இரணியல்11.2, குளச்சல்6.8, சுருளோடு20, கன்னிமார்9.6, பூதப் பாண்டி12.2, மயிலாடி5.2, கொட்டாரம்5.2, நிலப்பாறை2, பாலமோர்36.4, அடையாமடை19, ஆணைக் கிடங்கு16.4, திற்பரப்பு26, முள்ளாங்கி னாவிளை27.4, கோழிப் போர் விளை21, குருந்தன் கோடு10.4.

    நாகர்கோவிலில் இன்று காலை முதலே மழை பெய்ததையடுத்து கோட்டார் பகுதியில் பழமை வாய்ந்த ராட்சத மரம் ஒன்று முறிந்து விழுந்தது. சாலையில் மரம் முறிந்து விழுந்ததையடுத்து அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதை யடுத்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரோட்டில் முறிந்து கிடந்த மரத்தின் கிளைகளை வெட்டி அகற்றினார்கள். இதேபோன்று மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததில் மின்கம்பம் சேதம் அடைந்தது.

    குற்றியாறு, கோதையாறு, திருவட்டார் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக ரப்பர் பால் வெட்டும் தொழில் முடங்கி உள்ளது. தோவாளை, செண்பகராமன்புதூர் பகுதியில் செங்கல் உற்பத்தி யும் பாதிக்கப்பட்டது.
    Next Story
    ×