search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓ.பன்னீர்செல்வம்
    X
    ஓ.பன்னீர்செல்வம்

    பெண்ணுரிமைக்கு எதிராக நடக்கும் செயல்களை தி.மு.க. அரசு வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது- ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

    பெண்ணுரிமையை போற்றிப்பாடுகின்ற தமிழ்நாட்டில் பெண்ணடிமையை ஊக்குவிப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மதுரை மாநகராட்சியில், மேயர் இந்திராணியின் கணவர் மற்றும் உறவினர்களின் ஆதிக்கம் கொடிகட்டி பறப்பதாகவும், மதுரை மாநகராட்சி மன்றத்தில் முன் வரிசையில் இடமளிக்காததைக் கண்டித்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டு, பின் வெளிநடப்பு செய்ததாகவும், நேற்று முன்தினம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்திலும் முன்வரிசையில் இடமளிக்காததால் இரு தரப்பிற்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஓர் அசாதாரண சூழ்நிலை நிலவியதாகவும், இதனைத் தொடர்ந்து மேயரிடம் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் புகார் அளிக்க சென்றதாகவும், அவர்களுடன் செய்தியாளர்களும் சென்றனர்.

    அப்போது மேயரின் கணவர் மற்றும் அவரது ஆட்கள் செய்தியாளர்கள் உள்ளே நுழைவதைத் தடுக்கும் வகையில் கதவை பூட்டியதாகவும், இதில் இரு செய்தியாளர்கள் காயமடைந்ததாகவும், இதனைக் கண்டித்து செய்தியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டதாகவும், மேயரின் கணவர் மற்றும் அவர்களுடைய உறவினர்கள் ஆதிக்கம்தான் மாநகராட்சியில் ஓங்கி இருக்கிறது என்றும், அவர்கள் தான் மேயர் அலுவலகத்தையே ஆக்கிரமிப்பு செய்திருப்பதாகவும், மக்கள் பிரச்சினை உட்பட அலுவலகம் சார்ந்த தகவல்களை இவர்களை மீறி மேயரிடம் எடுத்துச் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளதாகவும், மாநகராட்சி அலுவலர்கள் கூட மேயர் அலுவலகம் பக்கம் செல்வதில்லை என்றும், தி.மு.க. கவுன்சிலர்களே இதுகுறித்து அதிருப்தியில் உள்ளதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

    மதுரை மாநகராட்சி மேயரின் கணவர், உறவினர்கள் மற்றும் அடியாட்களின் அலுவலக வருகை மற்றும் தலையீட்டிற்கு அ.தி.மு.க.வின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெண்களுக்குப் பதிலாக அவர்களது கணவன்மார்களும், உறவினர்களும் ஆட்சி அதிகாரத்தில் ஈடுபடுவது என்பது பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் செயல்.

    ஒருபுறம் பெண்ணுரிமையைப் பற்றி பேசிக் கொண்டு, மறுபுறம் பெண்ணடிமையை ஊக்குவிப்பது என்பது “படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில்’ என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது. ஒரு வேளை இதுதான் “திராவிட மாடல்” போலும்!

    பெண்ணுரிமையை போற்றிப்பாடுகின்ற தமிழ்நாட்டில் பெண்ணடிமையை ஊக்குவிப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் வீட்டை மட்டும் ஆண்டு வந்த பெண்கள் இன்று நாட்டையும் ஆளத் தொடங்கியுள்ள நிலையில், அவர்களை பொம்மையாக வைத்து, ஆண்கள் செயல்படுவது என்பது மகளிருக்கு எதிரான, ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கின்ற செயல்.

    இது , “ பெண் முதலில் தந்தைக்கு அடிமை, பின் கணவனுக்கு அடிமை, பின் மகனுக்கு அடிமை” என்னும் பழமைவாதத்தை நோக்கி செல்வது போல் உள்ளது. இதனைத் தி.மு.க. அரசு வேடிக்கைப் பார்ப்பது என்பது, இதிலும் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறதோ என்ற சந்தேகத்தை பொது மக்களிடையே எழுப்பி உள்ளது.

    ‘மகளிர் உரிமை’ குறித்து அடிக்கடி பேசும் முதல்-அமைச்சர், மகளிருக்கு உரிமைத் தொகை என வாக்குறுதி அளித்த முதல்-அமைச்சர் உண்மையிலேயே மகளிர் முன்னேற்றத்தில் அக்கறை இருக்குமானால், இதில் உடனடியாக தலையிட்டு, மதுரை மாநகர மேயரின் கணவர், உறவினர்கள், அடியாட்கள் மட்டுமல்லாமல், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் மகளிர் வகிக்கும் பதவிகளில், அவர்களது கணவர்களோ அல்லது உறவினர்களோ அல்லது அடியாட்களோ தலையிடுவதை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அ.தி.மு.க.வின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×