என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னிமலை அருகே உள்ள பசுவப்பட்டி கிராமத்தில் மழைக்கு சேதமான வாழைகள்.
    X
    சென்னிமலை அருகே உள்ள பசுவப்பட்டி கிராமத்தில் மழைக்கு சேதமான வாழைகள்.

    சூறாவளி காற்றுக்கு வாழைகள் சேதம்

    ஈரோடு மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கன மழை பெய்ததால், சூறாவளி காற்றுக்கு வாழைகள் சேதமடைந்துள்ளன
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கன மழை பெய்ததால், சூறாவளி காற்றுக்கு வாழைகள் சேதமடைந்துள்ளன

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதேபோல் நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

    அம்மாபேட்டையில் இரவு 9 மணி முதல் 10 மணி வரை சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. அம்மாபேட்டை நெரிஞ்சிபேட்டை, சிங்கம்பட்டி, சித்தார், ஒலகடம், பூணாச்சி, தென்னம்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. 

    அம்மாபேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுக்கு மரங்கள் முறிந்து விழுந்தன. அம்மாபேட்டையில் 7 மின்கம்பங்களும், தென்னம்பட்டியில் 3 மின்கம்பங்களும் சூறாவளி காற்றுக்கு சாய்ந்து விழுந்தன.  

    சத்தியமங்கலத்தில் இரவு 9 மணி முதல் 10 மணி வரை சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. சத்தியமங்கலம், ஓட்டக்குட்டை, சிக்கரசம்பாளையம், புளியங்கோம்பை, புதுபீர்கடவு, பண்ணாரி, அரியப்பம்பாளையம், கெஞ்சனூர், திம்பம் மலைப்பாதையிலும் பலத்த மழை பெய்தது.

    சத்தியமங்கலத்தை அடுத்த ஓட்டக்குட்டையில் கோபால் சாமி என்பவரது தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த அறுவடைக்கு தயாரான 2 ஆயிரம் கதளி வாழைகள் சூறாவளி காற்றுக்கு முறிந்து விழுந்து சேதமானது. 

    அந்தியூரில் இரவு 8 மணி முதல் 9 மணி வரை பலத்த மழை பெய்தது. அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.  பெருந்துறையில் இரவு 9 மணி முதல் 11.30 பலத்த மழை பெய்தது. பெருந்துறை, காஞ்சிக்கோவில், விஜயமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

    கவுந்தப்பாடியில் இரவு 8 மணி முதல் 11.30 வரை சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. கவுந்தப்பாடி, சலங்கபாளையம், வேலம்பாளையம், அய்யம்பாளையம், நல்லிக்கவுண்டம்பா ளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பலத்த மழை பெய்தது.

    ஆப்பக்கூடலில் நேற்று இரவு 8.15 மணி முதல் 9.30 மணி வரை இடி மற்றும் காற்றுடன் மழை பெய்தபோது, அத்தாணி கரட்டூர்மேடு பகுதியில் சாலையோரத்தில் இருந்த 50 ஆண்டுகள் பழமையான வேப்பமரம் முறிந்து சாலையில் விழுந்தது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ஆப்பக்கூடல் அடுத்த அத்தாணி கரட்டூர்மேடு பகுதியில் நேற்று வீசிய சூறாவளி காற்றில் அப்பகுதியில் உள்ள சில மரங்களின் மரக்கிளைகள் முறிந்து சாலையில் விழுந்து கிடந்தது.

    சென்னிமலையில் நேற்று இரவு சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. சென்னிமலையை அடுத்த பசுவப்பட்டி ஊராட்சி  கந்தசாமி பாளையத்தில் முத்துக்குமார் என்பவரது தோட்டத்தில் 7 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த ரூ. 10 லட்சம் மதிப்பிலான நேந்திரன் வாழைகள் சூறாவளி காற்றுக்கு முறிந்து விழுந்து சேதமானது.
      
    ஈரோட்டில் நேற்று பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    ஈரோடு-7, பெருந்துறை-53, கோபி-9.6, தாளவாடி-28, சத்தியமங்கலம்-4, பவானிசாகர்-8.4, பவானி-8.8, கொடுமுடி-4.2, நம்பியூர்-2, சென்னிமலை-51, மொடக்குறிச்சி-13, கவுந்தப்பாடி-31.2, எலந்தக்குட்டை-4.6, அம்மாபேட்டை-41, கொடிவேரி-15, குண்டேரிபள்ளம்-16.8, வரட்டுப்பள்ளம்-16.8.

    Next Story
    ×