search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமைச்சர் மா.சுப்பிரமணியன்- ஷவர்மா
    X
    அமைச்சர் மா.சுப்பிரமணியன்- ஷவர்மா

    பதப்படுத்தும் வசதி இல்லாத ஷவர்மா கடைகள் மூடப்படும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை

    அனைத்து மாவட்டங்களிலும் ஷவர்மா கடைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் கடந்த 2 நாட்களில் ஆயிரம் கடைகளில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    ஷவர்மா என்ற மேலை நாட்டு உணவு வகை இளைய தலைமுறையிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

    இறைச்சியை குளிர வைத்து பின்னர் எடுத்து வெட்டி மைதா மாவு கலந்து தயார் செய்து அசைவ கடைகள் முன்பு கம்பியில் மொத்தமாக தொங்கவிட்டிருப்பார்கள். அதை சிறிது சிறிதாக அறுத்து எடுத்து விற்பார்கள்.

    சுகாதாரம் இல்லாமலும், கெட்டுப்போன இறைச்சியாலும் உடலுக்கு மிக்பெரிய தீங்கு ஏற்படுகிறது. சமீபத்தில் ஷவர்மா சாப்பிட்டதால் கேரளாவில் ஒரு மாணவி உயிரிழந்தார். இதனால் அந்த மாநிலத்தில் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    தமிழகத்திலும் சிலருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட எல்லா நகர பகுதியிலும் ஷவர்மா வியாபாரம் அமோகமாக நடக்கிறது.

    இந்த நிலையில் ஷவர்மா கடைகள் மீது நடவடிக்கை எடுக்க மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    ஷவர்மா

    மேலை நாட்டு உணவான ஷவர்மா நமது கால நிலைக்கு ஏற்றதல்ல. உடல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை தெரிந்தும் சிறுவர்கள், இளைஞர்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள். அவர்களாகவே இந்த உணவை தவிர்ப்பது நல்லது.

    இறைச்சியை பக்குவப்படுத்தி பதப்படுத்தி வைக்கும் எந்த வசதியும் இல்லாமல் திறந்த வெளியிலேயே தயார் செய்கிறார்கள்.

    அனைத்து மாவட்டங்களிலும் ஷவர்மா கடைகளை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் ஆயிரம் கடைகளில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து இதே மாதிரி நடந்தால் அந்த கடைகள் மூடப்படும்.

    ஆடு, கோழி உள்ளிட்ட சமைக்காத இறைச்சிகளை முறையாக பதப்படுத்த வேண்டும். அவ்வாறு பதப்படுத்தாமல் நீண்டநேரம் வெளியில் வைத்திருந்தால் சால்மோனெல்லா, ஷிகெல்லா, ஈகோலை உள்ளிட்ட பாக்டீரியாக்கள் உருவாக வாய்ப்புள்ளது. இவ்வாறு பாக்டீரியாக்கள் உருவாகி கெட்டுப்போன இறைச்சியை சாப்பிட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    எனவே சமைக்காத இறைச்சிகளை 18 டிகிரி செல்சியசில் வைக்க வேண்டும். அப்போதுதான் அந்த இறைச்சி கெட்டுப்போகாமல் இருக்கும். இறைச்சியில் பாக்டீரியா இருந்தாலும் குறிப்பிட்ட செல்சியசில் சமைக்கும் போது பாக்டீரியாக்கள் அழிந்து விடும். எனவே இறைச்சியால் செய்யக்கூடிய அசைவ உணவுகள் 70 டிகிரி செல்சியசில் சமைக்க வேண்டும்.

    இறைச்சியை நீண்ட நாட்களுக்கு வைத்திருக்காமல் உடனுக்குடன் பயன்படுத்தி விற்பனை செய்ய வேண்டும். இறைச்சியில் செயற்கை வண்ணங்களை சேர்க்ககூடாது. ஷவர்மாவை கடைக்கு வெளியே வைத்து விற்பனை செய்யக்கூடாது. உணவகங்களில் இறைச்சிகளை 18 டிகிரி செல்சியசில் முறையாக வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் உணவகங்களுக்கு விதிக்கப்பட்டு வருகிறது.

    ஷவர்மா கடைகளில் இறைச்சி கெட்டுப்போகாமல் இருக்கிறதா? நன்றாக வேகவைக்கப்பட்டுள்ளதா? பதப்படுத்தி பக்குவப்படுத்தும் வசதி கடைகளில் இருக்கிறதா? பாதுகாப்பான இடங்களில் வைத்து சமைக்கப்படுகிறதா? என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×