search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாய் கிருஷ்ணகுமாரியை அவரது மகள் டாக்டர் ஞானசவுந்தர்யா அழைத்து சென்ற போது எடுத்த படம். அருகில் டாக்டர் தமிழிசை
    X
    தாய் கிருஷ்ணகுமாரியை அவரது மகள் டாக்டர் ஞானசவுந்தர்யா அழைத்து சென்ற போது எடுத்த படம். அருகில் டாக்டர் தமிழிசை

    தாயின் பிரசவ ஆபரேசனுக்கு கையெழுத்து போட்டேன்... அன்னையர் தினத்தில் மலரும் நினைவுகளை பகிர்ந்த ஆளுநர் தமிழிசை

    வீட்டில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தாய்க்கு திடீர் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அப்போது தாயை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று எதுவும் புரியாத வயதில் ஆபரேசன் படிவத்தில் கையெழுத்து போட்டு கொடுத்துள்ளார்.

    சென்னை:

    அன்னையர் தினமான இன்று ஒவ்வொருவரும் அம்மாக்களுடன் இருக்கும் பாசத்தையும், நெகிழ்ச்சியான சம்பவங்களையும் மலரும் நினைவுகளாக பகிர்ந்துள்ளார்கள்.

    தெலுங்கானா மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தந்தை குமரிஅனந்தன் தமிழக காங்கிரசின் மூத்த தலைவர் ஆவார். நாட்டில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட கால கட்டததில் தமிழிசை பள்ளி மாணவியாக இருந்துள்ளார். நெருக்கடி நிலை மற்றும் அரசியல் சூழ்நிலை காரணமாக குமரிஅனந்தன் வெளி மாநிலங்களில் சுற்றி இருக்கிறார்.

    வீட்டில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தாய்க்கு திடீர் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அப்போது தாயை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று எதுவும் புரியாத வயதில் ஆபரேசன் படிவத்தில் கையெழுத்து போட்டு கொடுத்துள்ளார்.

    அந்த நினைவுகளை அவர் முக நூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது வருமாறு:

    அது அவசர நிலை அறிவித்த ஆண்டின் ஜுன் மாதம். அரசியல் சூழ்நிலை காரணத்திற்காக வெளி மாநிலங்களிலும், சிறையிலும் பல வாரங்கள்... அப்பா வீட்டில் இல்லாத நிலை... அவசரமாக மருத்துவமனை செல்லும் நிலையில் பிரசவ வலியோடு அம்மா... அம்மாவை அவசர அவசரமாக மருத்துவமனை அழைத்து செல்கிறேன். பள்ளி மாணவியான நான் பதட்டத்துடன் அறுவை சிகிச்சை அரங்கின் வெளியே... அவசரமாக அறுவை சிகிச்சை செய்துதான் குழந்தையை எடுக்க முடியும் என்கிறார் மருத்துவர்...

    அதிர்ந்து போகிறேன் நான்... அழுது கொண்டே என்னிடம் கொடுத்த அறுவை சிகிச்சை பத்திரத்தில் கையெழுத்திடுகிறேன்... அவசரமாக தன்னை மகப்பேறு மருத்துவரிடம் ஒப்படைத்த மகளை.. மகப்பேறு மருத்துவராக்கி... பின்பு அழுதுகொண்டு அவசர சிகிச்சை பத்திரத்தில் கையெழுத்திட்ட மகளை ஆளுமையுடன் வளர்த்து ஆளுநராக்கி அரசியலமைப்பு பத்திரத்தில் கையெழுத்திடும்படி வளர்த்தது என் அம்மாவின் சாதனை...

    சின்ன வயதில் அச்சமின்றி அறுவை சிகிச்சை அரங்குக்கு சென்ற அம்மா இப்போது ஒரு சிறிய அறுவை சிகிச்சைக்காக வயது முதிர்வின் காரணமாக அறுவை சிகிச்சை அரங்கிற்கு செல்ல அச்சப்பட்ட போது... அன்று அவசர நிலை காலத்தில் அறுவை சிகிச்சை மூலம் பிறந்த என் கடைசி தங்கையை மருத்துவராக்கி... அதே தங்கை ஞான சவுந்தர்யா மருத்துவராக அம்மாவுடன் துணையாக அறுவை சிகிச்சை அரங்கிற்கு செல்லும் அளவிற்கு வளர்த்தது அவர் சாதனை...

    வேதனைகளை சுமந்து சாதனை பிள்ளைகளை பெற்ற என் அம்மாவிற்கு அவர் சொல்லி கொடுத்தபடி ஒழுக்கமாகவும்... ஒழுங்காகவும் வாழ்வது நாங்கள் எங்கள் அம்மாவிற்கு கொடுக்கும் அன்பு பரிசு... என் அம்மாவிற்கும்... அனைத்து அம்மாக்களுக்கும் என் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அந்த பதிவில் கூறி உள்ளார்.

    Next Story
    ×