என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிராம சபை கூட்டம் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.
நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும் - கலெக்டர் பேச்சு
பனங்குடியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும் என கலெக்டர் அருண்தம்புராஜ் பேசியுள்ளார்.
நாகப்பட்டினம்;
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், முகம்மது ஷாநவாஸ் எம்.எல்.ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
கிராமத்தை ஆக்கப்பூர்வமாக கொண்டு செல்வதே கிராம சபை கூட்டமாகும். இந்த கிராமசபை கூட்டத்தில் மக்களுக்கு எல்லா விஷயங்களும் தெளிவாக தெரியப்படுத்தப்பட வேண்டும். இதுவரை நாம் என்ன பயனடைந்திருக்கிறோம். இனி என்ன செய்ய வேண்டும் என்பதை மக்கள் முதலில் புரிந்து கொள்ளவேண்டும். அடுத்த 3 மாதத்திற்குள் கிராமசபை கூட்டம் நடைபெறும்.
இக்கூட்டத்தின் முக்கிய நோக்கம் நமக்கு தேவையான திட்டங்கள் என்ன என்பதை முதலில் பொதுமக்களாகிய நீங்கள் அறிந்துக்கொள்ள வேண்டும். இந்த கிராமத்தில் துறைகள் ஒருங்கிணைந்து கிராம மக்களின் 17 தேவைகளை அறிந்து அதனை பூர்த்தி செய்வதற்கான பொறுப்பு ஒவ்வொரு துறை அலுவலர்களுக்கும் உள்ளது.
இந்த வருடம் 2022-23க்கு 100 நாள் வேலையில் என்ன திட்டம் செயல்படுத்த வேண்டும் என்பதையும், இந்த கிராமசபை கூட்டத்தில் கூறப்படுகின்ற திட்டத்தில் உங்களுடைய அனைத்து கருத்துகளையும் தெரிவிக்கலாம். இந்த பனங்குடி கிராமத்தை நீர்நிறைந்த கிராமமாக மாற்ற குளங்களை தூர்வாரி ஆழப்படுத்துவது மற்றும் பண்ணை குட்டைகள் அமைப்பதன் மூலமாகவும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திட முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.
இதில் உதவி இயக்குநர் ஊராட்சிகள் சவுந்தரராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலமுருகன், பாத்திமா ஆரோக்கியமேரி, வேளாண்மை இணை இயக்குநர் ஜாக்குலா அக்கண்டராவ், திருமருகல் வட்டார ஆத்மா குழு தலைவர் செல்வ செங்குட்டுவன், பனங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ஜமுனா செந்தில்குமார், ஒன்றியக்குழு உறுப்பினர் வினோதினி கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் கட்டுமாவடி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் தலை–மையிலும், குத்தாலத்தில் மகேந்திரன் தலைமையிலும், நரிமணத்தில் கார்த்திக் தலை–மையிலும், திருமருகலில் கண்ணன் தலைமையிலும், உத்தம–சோழபுரத்தில் ஜனனி பாலாஜி தலைமையிலும் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
Next Story






