search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீட் தேர்வு
    X
    நீட் தேர்வு

    நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 15-ந்தேதி வரை அவகாசம்

    விண்ணப்ப விவரங்கள், தேர்வு அறை நுழைவுச்சீட்டு பதிவிறக்கம், தேர்வு முடிவுகள் உள்ளிட்ட விவரங்களை என்.டி.ஏ. வலைதளம் மூலமாக விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ளலாம்.
    சென்னை:

    மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மருத்துவ படிப்புகள் படிப்பதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. நீட் தேர்வு மதிப்பெண் மட்டுமே மருத்துவ படிப்பை நிர்ணயிப்பதால் நாடு முழுவதும் நீட் தேர்வு எழுத மாணவ-மாணவிகள் தயாராகி வருகிறார்கள்.

    இதற்காக சிறப்பு வகுப்புகள், பள்ளிகள் நடத்தப்படுகின்றன. மேலும் தனியார் பயிற்சி மையங்களில் பல லட்சங்கள் செலவழித்து நீட் தேர்வுக்கான பயிற்சி பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று பாதிப்பில் கடந்த ஆண்டு நீட் தேர்வு தாமதமாக நடத்தப்பட்டு மருத்துவ கல்லூரிகளும் தாமதமாக திறக்கப்பட்டன.

    இந்த வருடம் கொரோனா தொற்று கட்டுக்குள் இருப்பதால் நாடு முழுவதும் பிளஸ்-2 தேர்வு நடைபெற்று வருகின்றன. அதனால் நீட் தேர்வையும் குறித்த காலத்திற்குள் நடத்தி முடித்து மருத்துவ மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தேசிய தேர்வு முகமை நீட் தேர்வை ஜூலை 17-ந்தேதி நடத்த முடிவு செய்துள்ளது.

    கடந்த மாதம் இந்த அறிவிப்பு வெளியானது முதல் பிளஸ்-2 மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். மே மாதம் 6-ந்தேதி இரவு வரை விண்ணப்பிக்க அவகாசம் கொடுக்கப்பட்டு இருந்தது. தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.

    இந்த நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் 9 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. மே 15-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அன்று இரவு 9 மணி வரை விண்ணப்பிக்கவும் இரவு 11.50 மணிவரை விண்ணப்பிக்க கட்டணம் செலுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது.

    விண்ணப்ப விவரங்கள், தேர்வு அறை நுழைவுச்சீட்டு பதிவிறக்கம், தேர்வு முடிவுகள் உள்ளிட்ட விவரங்களை என்.டி.ஏ. வலைதளம் மூலமாக விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ளலாம்.

    இதற்கிடையில் முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கான நீட் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். மே 21-ந்தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று 85 சதவீத முதுநிலை நீட் மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அகில இந்திய மருத்துவ சங்கம் சார்பில் ஆன்லைன் வழியாக நடத்திய ஓட்டெடுப்பில் இதனை தெரிவித்துள்ளனர்.

    மருத்துவ கலந்தாய்வு நடைபெறுவதால் அதற்கு தேவையான கால அவகாசம் வேண்டும் என்று முதுநிலை மருத்துவ டாக்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    Next Story
    ×