என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொலை செய்யப்பட்ட தொழிலதிபர்
    X
    கொலை செய்யப்பட்ட தொழிலதிபர்

    அறந்தாங்கி அருகே தொழிலதிபர் கழுத்தறுத்து கொலை: 175 சவரன் நகை கொள்ளை

    பள்ளிவாசலுக்கு எதிரே ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் வீட்டிலிருந்த ஒருவரை கொலை செய்து விட்டு 175 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    அறந்தாங்கி :

    புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா ஆவுடையார்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் முகமது நிஜாம் (வயது 52). அதே பகுதியின் முன்னாள் ஜமாத் தலைவரான இவர் கறம்பக்குடியில் ஆப்டிக்கல்ஸ் கடை வைத்துள்ளார்.

    மேலும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்களும் செய்து வந்தார். இவரது மனைவி ஆயிஷா பீவி (48). இந்த தம்பதிக்கு ராஜாமுகமது, சேக் அப்துல்காதர் என்ற இரண்டு மகன்களும், பர்கானா என்ற ஒரு மகளும் உள்ளனர்.

    மகள் பர்கானாவிற்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். மகன்கள் இருவரும் வெளியூரில் உள்ள ஆப்டிக்கல் கடையை நிர்வகித்து வருகின்றனர். அவர்கள் அங்கேயே தங்கிக்கொள்வார்கள். அவ்வப்போது ஆவுடையார்பட்டினம் வந்து செல்வது வழக்கம்.

    எனவே முகமது நிஜாமும், அவரது மனைவி ஆயிஷா பீவியும் ஆவுடையார்பட்டினத்தில் தனியாக வாழ்ந்து வந்துள்ளனர். தற்போது ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு முகமது நிஜாம் நோன்பு கடைபிடித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் வீட்டின் எதிர்புறம் உள்ள பள்ளிவாசலில் முகமது நிஜாம் தொழுகையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் வீட்டின் முன்பக்க வராண்டாவில் உட்கார்ந்து செல்போன் பார்த்துக் கொண்டிருந்தார்.

    அப்போது வீட்டின் சுற்றுச்சுவரில் ஏறிக்குதித்து 3 மர்ம நபர்கள் உள்ளே நுழைந்தனர். இதனை சற்றும் எதிர்பாராத முகமது நிஜாம் அவர்களை பார்த்து யார் நீங்கள், உங்களுக்கு என்ன வேண்டும், ஏன் சுவர் ஏறிக்குதித்தீர்கள்? என்று கேட்டார்.

    அவரது கேள்விக்கு எந்தவித பதிலும் அளிக்காத மர்ம நபர்கள் திடீரென்று தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து முகமது நிஜாமின் கழுத்தை ஆட்டை அறுப்பது போல் கரகரவென அறுத்துள்ளனர். அவர்களின் பிடியில் இருந்து விடுபட முகமது நிஜாம் போராடியும் பலன் அளிக்கவில்லை. இதில் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் அங்கேயே துடிதுடித்து இறந்தார்.

    இதனை வீட்டிற்குள் இருந்த முகமது நிஜாமின் மனைவி ஆயிஷா பீவி அறிந்திருக்கவில்லை. இதனைத்தொடர்ந்து வீட்டின் உள்ளே மர்ம நபர்கள் சென்றனர். கையில் ரத்தம் சொட்ட சொட்ட கத்தியுடன் திடீரென்று வந்த அவர்களை பார்த்ததும் ஆயிஷா பீவி அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் அந்த கும்பல் ஆயிஷா பீவியின் கை, கால்களை கட்டி போட்டுவிட்டு, பீரோ சாவியை தரும்படி கேட்டுள்ளனர். அவர் தர மறுக்கவே ரத்தக்கறையுடன் உள்ள கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். இதில் உயிருக்கு பயந்த ஆயிஷாபீவி பீரோ சாவியை அவர்களிடம் கொடுத்துள்ளார்.

    உடனே சாவியை வாங்கிய மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 175 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணத்தை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். அதனை தொடர்ந்து கை, கால்கள் கட்டப்பட்டிருந்த ஆயிஷா பீவி மெல்ல மெல்ல நகர்ந்து சென்று செல்போனை எடுத்து தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    தகவலையடுத்து விரைந்து வந்து பார்த்த உறவினர்கள் முகமதுநிஜாம் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சம்பவம் குறித்து மணமேல்குடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    மேலும் வீட்டினுள்ளே கட்டப்பட்டு கிடந்த ஆயிஷா பீவியை காப்பாற்றினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷாபார்த்தீபன் சம்பவம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் வழக்குப்பதிவு செய்த மணமேல்குடி போலீசார் முதல் கட்ட விசாரணையை தொடங்கினர்.

    அதேபோல் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணனும் வந்து கொலை, கொள்ளை நடந்த இடத்தை அங்குலம், அங்குலமாக பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவரது உத்தரவுப்படி கொள்ளையர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    தொழில் அதிபர் நகை, பணத்திற்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது தொழில் போட்டியில் அவரை கொலை செய்துவிட்டு நகைக்காக கொலை நடந்தது போன்று செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் முன்விரோத காரணங்கள் உள்ளதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

    மேலும் சம்பவம் நடந்த இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வந்து கொள்ளையர்கள் விட்டுச்சென்ற தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

    பள்ளிவாசலுக்கு எதிரே ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் வீட்டிலிருந்த ஒருவரை கொலை செய்து விட்டு 175 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


    இதையும் படிக்கலாம்...சீனர்களுக்கு வழங்கிய சுற்றுலா விசாவை ரத்து செய்தது இந்தியா
    Next Story
    ×