search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழை
    X
    மழை

    ஈரோடு மாவட்டத்தில் பரவலாக பெய்தது- கொடுமுடியில் 10 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது

    ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட் பகுதியில் தண்ணீர் தேங்கி நின்றது. மழை நீர் வடிந்த பின்பும் சேறும் சகதியுமாக காணப்பட்டது. இதனால் இன்று காலை மார்க்கெட்டுக்கு வந்த பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. நேற்றும் சுமார் 100 டிகிரிக்கு மேல் வெயில் சுட்டெரித்து வந்தது.

    இந்த நிலையில் ஈரோட்டில் நேற்று மாலை திடீரென மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதை தொடர்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது. இதையடுத்து சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக பரவலாக பலத்த மழை கொட்டியது. இதை தொடர்ந்து நள்ளிரவு 12 மணி வரை மழை தூறி கொண்டே இருந்தது.

    பலத்த மழை காரணமாக ரோடுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அவதி அடைந்தனர். மேலும் ஒரு சில இடங்களில் ரோடுகள் சேறும், சகதியுமாக காணப்பட்டது.

    இதனால் ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட் பகுதியில் தண்ணீர் தேங்கி நின்றது. மழை நீர் வடிந்த பின்பும் சேறும் சகதியுமாக காணப்பட்டது. இதனால் இன்று காலை மார்க்கெட்டுக்கு வந்த பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    மழை பெய்தால் வ.உ.சி. மார்க்கெட்டு பகுதி சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தொடர்ந்து அவதி அடைந்து வருகிறார்கள். இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வியாபாரிகள் மற்றும் பெண்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    மேலும் பார்க் ரோடு பகுதியில் இருந்து கருங்கல்பாளையம் பகுதி செல்லும் காமராஜர் பள்ளிக்கு செல்லும் ரோடு குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

    இந்த வழியாக தினமும் சேலம், நாமக்கல் மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் இருந்து ஏராளமான பஸ்கள் மற்றும் பல்வேறு வாகனம் வருகிறது. ரோடு சேறும் சகதியுமாக காணப்பட்டதால் பஸ்கள் ஊர்ந்து சென்றன. மேலும் இருசக்கர வாகனங்களில் வந்த வாகன ஓட்டிகள் சிலர் தட்டு தடுமாறி கீழே விழுந்தனர்.

    கொடுமுடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மாவட்டத்திலேயே அதிகபட்சமாக 10 செ.மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. கொடுமுடி பகுதியில் நேற்று மாலை மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல பலத்த மழை கொட்டியது.

    கொடுமுடி, ஒத்தக்கடை, வடக்கு புதுப்பாளையம், ஊஞ்சலூர், இச்சிப்பாளையம், தாமரைப்பாளையம், கொளாநல்லி, நடுப்பாளையம், கருமாண்டாம்பாளையம், சோளங்காபாளையம், பாசூர், பழனிக்கவுண்டன் பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் சுமார் 2 மணிநேரம் காற்றுடன் பலத்த மழை பெய்தது.

    தொடர்ந்து இரவு 11 மணி மணி வரை மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவியது.

    கொடுமுடி பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. அப்போது ஈரோட்டில் இருந்து கரூர் நோக்கி ஜெனரேட்டர் ஏற்றிய மினி வேன் ஒன்று வந்தது. தாமரைப்பாளையம் அருகே தண்ணீர் பந்தல் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த போது நிலை தடுமாறி ரோட்டின் இடது புறத்தில் கவிழ்ந்தது.

    இதில் டிரைவர் மற்றும் உட்பட 2 பேர் காயத்துடன் உள்ளே சிக்கினர். உடனே அருகில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அம்மாபேட்டை, புளியம்பட்டி, ஆப்பக்கூடல், அத்தாணி, டி.என்பாளையம், கள்ளிபட்டி, பங்களாபுதூர் பகுதிகளில் நேற்று இரவு 7 மணி முதல் 10 மணி வரை பலத்த மழை பெய்தது. இதை தொடர்ந்து இரவு முழுவதும் மழை தூறி கொண்டே இருந்தது.

    மேலும் பவானி, சித்தோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மதியம் 3 மணி முதல் 10 மணி வரை சுமார் 7 மணி நேரம் பரவலாக மழை பெய்தது. கவுந்தப்பாடி பகுதியில் இடி- மின்னலுடன் பரவலாக மழை பெய்தது.

    மழையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. இதனால் பொது மக்கள் அவதி அடைந்தனர்.

    இதே போல் கோபி, பெருந்துறை, அந்தியூர், நம்பியூர், மொடக்குறிச்சி, நஞ்சை ஊத்துக்குளி, அவல் பூந்துறை உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை கொட்டி தீர்த்தது. இதனால் விவசாய நிலங்கள் பசுமையாக காணப்பட்டது.

    தொடர் மழையால் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி வருகிறது. கோடை காலத்தில் தொடர் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மீ.மீட்டரில் வருமாறு:

    ஈரோடு 15, கொடுமுடி 108, பெருந்துறை 18, பவானி 56.6, கோபி 19, சத்தி 5, பவானிசாகர் 6.4, தாளவாடி 1.2, சென்னிமலை 6, மொடக்குறிச்சி 19, கவுந்தப்பாடி 18.4, எலந்த குட்டை மேடு 12.8, அம்மாபேட்டை 11.6, கொடிவேரி 8.2, குண்டேரிபள்ளம் 16.4, வரட்டு பள்ளம் 22.
    Next Story
    ×