search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளாஸ்டிக் உபயோகத்தை குறைத்திடும் வகையில் கலெக்டர் விஷ்ணு, மாணவ- மாணவிகளுக்கு மை பேனா வழங்கினார்.
    X
    பிளாஸ்டிக் உபயோகத்தை குறைத்திடும் வகையில் கலெக்டர் விஷ்ணு, மாணவ- மாணவிகளுக்கு மை பேனா வழங்கினார்.

    நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி நதியில் மெகா தூய்மைப்பணி-கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்

    நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் தாமிரபரணி நதியை தூய்மைப்படுத்தும் மெகா துப்புரவு பணி இன்று தொடங்கியது. அதனை கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்.
    சிங்கை:

    நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் தாமிரபரணி நதியை தூய்மைப்படுத்தும் மெகா துப்புரவு பணி இன்று தொடங்கியது. பாபநாசம் முதல் மருதூர் அணைக்கட்டு வரை சுமார் 62 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெறும் இந்த தூய்மை பணியை தன்னார்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு தூய்மை பணியை மேற்கொண்டனர்.

    இன்று காலை கலெக்டர் விஷ்ணு காரையாறு மலைப்பகுதியில் உள்ள சின்ன மைலாறு பகுதியில் இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். காலையில் மாணவ- மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சியுடன் தூய்மைப்பணி தொடங்கியது.

    அதனைத்தொடர்ந்து பிளாஸ்டிக் உபயோகத்தை குறைத்திடும் வகையில் மஞ்சப்பை வழங்குதல், மை பேனா வழங்குதல், மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்குதல் உள்ளிட்டவை நடைபெற்றது.

    தொடர்ந்து கலெக்டர் விஷ்ணு தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. அதன் பின்னர் பாபநாசத்தில் தூய்மை பணியை கலெக்டர் விஷ்ணு பார்வையிட்டார். தொடர்ந்து கலெக்டர் விஷ்ணு மேல கொட்டாரம் இரும்பு பாலம் பகுதியில் ஆற்றில் படகு மூலம் சென்று தூய்மை பணிகளை பார்வையிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    அங்கிருந்து சிவந்திபுரம் பஞ்சாயத்திற்குட்பட்ட ஜோதி புரம் பகுதியில் தாமிரபரணி ஆற்றின் வழியாக படகு மூலம் வந்தடைந்தார். பின்னர் அம்பை அருகே உள்ள சின்ன சங்கரன்கோவிலில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மற்றும் கலை போட்டிகளை பார்வையிட்டார்.

    இந்த நிகழ்ச்சிகளில் களக்காடு- முண்டந்துறை புலிகள் காப்பக கள இயக்குனர் செந்தில்குமார், சூழலியல் மேம்பாட்டு அலுவலர் அன்பு, ஆர்.டி.ஓ. சிந்து, வி.கே.புரம் நகராட்சி சேர்மன் செல்வசுரேஷ்குமார், நகராட்சி கமிஷனர் கண்மணி, தாசில்தார் செல்வன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயஅருள்பதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×