search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொரோனா எக்ஸ் இ தொற்று
    X
    கொரோனா எக்ஸ் இ தொற்று

    தமிழகத்தில் 87 சதவீதம் பேருக்கு கொரோனா தொற்று எதிர்ப்பு சக்தி

    புதிய வகை வைரஸ் மூலம் இந்தியாவில் 4-ம் அலை உருவாகலாம் என்ற அச்சுறுத்தல் ஏற்பட்டு இருக்கிறது. இந்த அச்சுறுத்தல் உணர்வை அதிகரிக்கச் செய்யும் வகையில் வடமாநிலங்களில் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்தபடி உள்ளது.
    கொரோனா வைரஸ் பரவும்போது தனக்கு தானே புதிய உருமாற்றத்தையும் ஏற்படுத்திக் கொள்கிறது. கடந்த காலங்களில் காமா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ் என்று உருமாற்றம் பெற்று உலக மக்களை கொரோனா படாதபாடு படுத்தி விட்டது.

    இதன் தொடர்ச்சியாக தென்ஆப்பிரிக்காவில் கடந்த ஆண்டு கொரோனாவின் புதிய வடிவமான ஒமைக்ரான் வைரஸ் உருவாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அது பிஏ-1, பிஏ-2, பிஏ-3, பிஏ-4 என்று நான்கு வகையாக பரவியது.

    தற்போது பிஏ-5 அல்லது பிஏ-2 (12.1) என்ற புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் பரவி இருக்கிறது. இந்த புதிய வகை வைரசுதான் டெல்லி, அரியானா, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, மிசோரம் மாநிலங்களில் பரவி இருப்பதாக நிபுணர்கள் கருதுகிறார்கள்.

    இந்த புதிய வகை வைரஸ் மூலம் இந்தியாவில் 4-ம் அலை உருவாகலாம் என்ற அச்சுறுத்தல் ஏற்பட்டு இருக்கிறது. இந்த அச்சுறுத்தல் உணர்வை அதிகரிக்கச் செய்யும் வகையில் வடமாநிலங்களில் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்தபடி உள்ளது.

    தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் மக்கள் நிம்மதியாக இருக்கிறார்கள். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் முழுமையான இயல்புநிலை இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டதே இதற்கு காரணமாகும்.

    ஆனால் வடமாநிலங்களில் இருந்து விமானம், ரெயில்களில் வருபவர்கள் மூலம் தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரிக்கக்கூடும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. கடந்த காலங்களில் மற்ற மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவியதும் அதன் தாக்கம் தமிழகத்திலும் எதிரொலித்தது.

    அதேபோன்ற நிலை மீண்டும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத் தான் முக கவசம் அணிய வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள். முக கவசம் அணிவதை உறுதிப்படுத்தவே 500 ரூபாய் அபராதம் மீண்டும் கொண்டுவரப்பட்டு உள்ளது.

    இது சிலரிடம் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் தமிழக மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் தமிழகத்தில் கொரோனாவை எதிர்கொள்வதற்கான மருத்துவ கட்டமைப்பு போதுமான அளவுக்கு உள்ளது.

    தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 16 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மருந்துகள், ஆக்சிஜன்களும் தேவைக்கேற்ப கையிருப்பு இருக்கின்றன. மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களும் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்கிறார்கள். மொத்தத்தில் தமிழக சுகாதாரத்துறை எந்த தொற்று வந்தாலும் எதிர்கொள்ளும் வகையில் தயாராக இருக்கிறது.

    ஆனால் அவர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்பதே மிக மிக முக்கியமாகும். தமிழகத்தை பொறுத்தவரை புதிய உருமாற்றம் பெற்ற வைரஸ் வந்துள்ளதா? என்பது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.

    அப்படியே புதிய வைரஸ் வந்தாலும் தமிழக மக்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று மருத்துவ நிபுணர்கள் உறுதியாக சொல்கிறார்கள். அதற்கு அவர்கள் இரண்டுவித காரணத்தை உதாரணமாக காட்டுகிறார்கள்.

    முதலாவதாக தமிழக மக்கள் மத்தியில் உருவாகி இருக்கும் கொரோனா தொற்று எதிர்ப்பு ஆற்றலை சொல்கிறார்கள். மொத்த மக்கள் தொகையில் 87 சதவீதம் பேருக்கு கொரோனா தொற்று நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருக்கிறது. தமிழகம் முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த 4-வது கட்ட ஆய்வின் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    தடுப்பூசி செலுத்திக் கொண்டதால்தான் 87 சதவீதம் பேர் நோய் எதிர்ப்பு சக்தி பெற்று இருக்கிறார்கள். 2-வது தவணை தடுப்பூசியை இன்னமும் சுமார் 1 கோடி பேர் செலுத்திக் கொள்ளாமல் இருக்கிறார்கள். அவர்களும் செலுத்திக் கொண்டால் தமிழகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.

    இரண்டாவது ஒமைக்ரானின் புதிய உருமாற்றம் அதிக பாதிப்பை ஏற்படுத்தாது என்ற நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது. பொதுவாக ஒமைக்ரான் வைரஸ் அடுத்தடுத்து சிறு சிறு வடிவங்களாக மாறும் நிலையில் அதன் வீரியம் குறைந்து போனதை நிபுணர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர்.

    தற்போது பரவி வரும் 5-வது வகை ஒமைக்ரான் அவ்வளவு வீரியம் கொண்டது அல்ல. எனவே இந்த புதிய வைரசை நினைத்து மக்கள் அதிகம் பயப்பட வேண்டியதில்லை. ஏனெனில் அது சாதாரண ஜலதோ‌ஷம் போல இருக்கும். அதிகப் பாதிப்பை நிச்சயம் ஏற்படுத்தாது.

    தற்போது தமிழகத்தில் கொரோனா அதிகரித்தாலும் மருத்துவமனைகளில் இருப்பவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு. அதற்கு காரணம் கொரோனா முதல் அலை, இரண்டாவது அலைபோல உடல்நலத்தில் மிகப்பெரிய பாதிப்பை புதிய வைரசுகள் உருவாக்காததுதான்.

    என்றாலும் வயதானவர்கள், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், இணை நோய் இருப்பவர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். இந்த நடைமுறைகளை கடைபிடித்தாலே தமிழ்நாட்டில் பரவத் தொடங்கி இருக்கும் புதிய கொரோனா வைரசை அடித்து விரட்டி விடலாம்.

    Next Story
    ×