என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    மேலூர் அருகே 780 கிலோ குட்கா பறிமுதல்- 3 பேர் கைது

    மேலூர் அருகே 780 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலூர்:

    தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி அருகே போதைப்பொருட்கள் விற்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென டி.ஜி.பி. உத்தரவிட்டிருந்தார்.

    இதையடுத்து மாநிலம் முழுவதும் போலீசார் தனிப்படை அமைத்து கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பவர்களை அதிரடியாக கைது செய்து வருகின்றனர். மதுரை மாவட்டத்திலும் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின் பேரில் புறநகர் பகுதிகளில் போலீசார் அதிக கவனம் எடுத்து போதைப் பொருட்கள் விற்பனை செய்யும் கும்பலை கைது செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மதுரை மாவட்டம் மேலூரை அடுத்துள்ள திருவாதவூர் பகுதியில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதன் அடிப்படையில் மேலூர் சப்-இன்ஸ்பெக்டர் நாகநாதன் தலைமையில் போலீசார் அந்தப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதுதொடர்பாக திருவாதவூரை சேர்ந்த வேலாயுதம் என்பவரை பிடித்து விசாரணை செய்தனர்.

    இதில் அவர் கொடுத்த தகவலின் பேரில் சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலை சேர்ந்த முரளி மற்றும் அருண்குமார் ஆகிய 2 பேரைபிடித்து தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் குறிப்பிட்ட இடத்தில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 780 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த சரக்கு வேன், 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது.

    முரளி, அருண்குமார் வேலாயுதம் ஆகியோரை கைது செய்த போலீசார் இதில் தொடர்புடைய சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை சேர்ந்த அஜித்குமார் மற்றும் வசந்த் ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×