என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X
    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    ஊட்டி மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    மே 20ல் தொடங்க உள்ள மலர் கண்காட்சியில் பங்கேற்பதற்காக ஊட்டிக்கு வரும் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊட்டி 200-வது ஆண்டு விழாவையும் தொடங்கி வைக்கிறார்.
    ஊட்டி:

    சர்வதேச சுற்றுலாதலமான நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடைபெறும் மலர்கண்காட்சி உலக பிரசித்தி பெற்றது.

    இதனை காண்பதற்காக வெளிநாடுகள் மற்றும் உள்நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

    இந்த ஆண்டுக்கான 124-வது மலர் கண்காட்சி அடுத்த மாதம் 20-ந்தேதி தொடங்கி 24-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. 2 ஆண்டுகளுக்கு பிறகு மலர் கண்காட்சி நடக்க உள்ளதால் தாவரவியல் பூங்காவை அழகுபடுத்தும் பணி வேகமாக நடந்து வருகிறது.

    ஜப்பான், ஜெர்மனி, அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 275 வகையான விதைகள் கொண்டு வரப்பட்டு பூங்காவின் பல்வேறு பகுதிகளில் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது.

    மலர் கண்காட்சி மாடம், கண்ணாடி மாளிகையில் 35 ஆயிரம் வண்ண மலர்த் தொட்டிகளில் செடிகள் நடவு செய்யப்பட்டு, தண்ணீர் பாய்ச்சி பராமரிக்கப்பட்டு வருகிறது.

    2 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் இந்த மலர் கண்காட்சி தொடக்க விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். அவர் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்து தாவரவியல் பூங்காவில் அழகுபடுத்தி வைக்கப்பட்டுள்ள மலர்களையும் கண்டு ரசிக்க உள்ளார்.

    மு.க.ஸ்டாலின் வருகை மற்றும் அவருக்கு அளிக்க வேண்டிய வரவேற்பு குறித்த ஆலோசனை கூட்டம் ஊட்டியில் நடந்தது. கூட்டத்தில் தி.மு.க.வினர் பங்கேற்று பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர். தற்போது முதல்- அமைச்சருக்கு வரவேற்பு அளிப்பதற்கான முன்னேற்பாடு பணிகளில் தி.மு.க.வினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே ஊட்டி 200-வது விழாவையும் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக நீலகிரி எம்.பி. ராசா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஊட்டி 200-ம் ஆண்டை முன்னிட்டு நடப்பாண்டு ஜூன் மாதம் தொடங்கி ஓராண்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மே 20ல் தொடங்க உள்ள மலர் கண்காட்சியில் பங்கேற்பதற்காக ஊட்டிக்கு வரும் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊட்டி 200-வது ஆண்டு விழாவையும் தொடங்கி வைக்கிறார்.

    இதற்காக என்று சிறப்பு இணையதளம் உருவாக்கி பல்வேறு தகவல்களை பதிவேற்றம் செய்வதுடன், மாவட்ட நிர்வாகம் சார்பில் ஜான்சலீவன் சிலை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புகைப்பட கேலரியும் அமைக்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×