என் மலர்
உள்ளூர் செய்திகள்

திண்டுக்கல்லில் கொலை செய்யப்பட்டவர் அடையாளம் தெரிந்தது- பார் ஊழியரை கொன்று காரில் கடத்தி வீசிய கொடூரம்
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் ரெயில்வே சுரங்கப்பாதை முட்புதருக்குள் நேற்று முன்தினம் ஒரு வாலிபர் வெட்டுக்காயங்களுடன் இறந்து கிடந்தார். இது குறித்து அப்பகுதி மக்கள் அம்மையநாயக்கனூர் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகலெட்சுமி தலைமையிலான போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.
போலீசார் விசாரணையில் அந்த வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து அவரது உடலை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் பச்சை நிறத்தில் கட்டம் போட்ட சட்டையும், புளு கலர் பேண்ட்டும் அணிந்திருந்தார்.
போலீசார் விசாரணையில் அவர் தேனி மாவட்டம் போடி சொக்கலிங்கநகரைச் சேர்ந்த கணேசன் மகன் முத்து (வயது 32) என உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து டி.எஸ்.பி. சுகுமார் மேற்பார்வையில் அம்மையநாயக்கனூர் இன்ஸ்பெக்டர் சண்முகலெட்சுமி தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
கொலை செய்யப்பட்ட முத்துவுக்கு திருமணமாகி ரேணுகா என்ற மனைவியும், 1 மகனும் உள்ளனர். இவர் திருப்பூரில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது உடன் பணிபுரியும் சில ஊழியர்களிடம் பணம் திருடியதாக அவர் மீது ஆத்திரத்தில் இருந்துள்ளனர்.
இதனால் சம்பவத்தன்று அதே பாரில் வேலை பார்க்கும் ஊழியர்கள் முத்துவுக்கு நன்றாக மது வாங்கிக் கொடுத்து குடிபோதையில் இருந்த அவரை அரிவாள் மற்றும் கத்தியால் வெட்டினர்.
இதில் முத்து பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை திருப்பூரிலேயே போட்டுவிட்டால் உடன் வேலை பார்த்த நாம் மாட்டிக் கொள்வோம் என நினைத்து வேறு எங்காவது வீசிவிட முடிவு செய்தனர்.
அதன்படி ஒரு காரில் அவரது உடலை ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் நோக்கி வந்தனர். சுங்கச்சாவடியை கடந்ததும் ரெயில்வே தண்டவாளத்திற்கு அருகே முட்புதரில் வீசிவிட்டு மாயமாகினர்.
யாருக்கும் சந்தேகம் வராத வகையில் மறுநாள் வேலைக்கு சென்று விட்டனர். இந்நிலையில் போலீசார் சுங்கச்சாவடி வழியாக கடந்து சென்ற வாகனங்களின் எண்களை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் திருப்பூரில் இருந்து வந்த வாகனத்தின் மீது சந்தேகம் ஏற்பட்டதால் அந்த எண்ணை தொடர்பு கொண்டு விசாரணை நடத்தியதில் கொலையாளிகள் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களில் சிலரை பிடித்துள்ள போலீசார் மேலும் சிலரை தீவிரமாக தேடி வருகின்றனர்.






