என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போராட்டம்
    X
    போராட்டம்

    தபால்கள் அனுப்பும் போராட்டம்

    இளையான்குடியில் புதிய பஸ் நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து முதல்வருக்கு தபால்கள் அனுப்பும் போராட்டம் நடந்தது.
    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் நகருக்கு வெளியே 3 கி.மீ. தொலைவில் ரூ 3.85 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ்நிலையம் அமைக்க கடந்தமாதம் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அடிக்கல் நாட்டினார். 

    ஏற்கனவே  இளையான் குடியில் பஸ்நிலையம் செயல்பட்டு வரும் பகுதியி லேயே அந்த பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான பாழடைந்த  கட்டிடங்களை இடித்துவிட்டு அந்த இடங்களையும் சேர்த்து விரிவாக்கம் செய்து புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி ஊருக்கு வெளியே பஸ்நிலையம் அமைக்கப்படும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 

    இதையடுத்து இளையான் குடி புதிய பஸ் நிலையம்  எதிர்ப்பு குழு சார்பில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல கட்ட போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

    ஏற்கனவே கடையடைப்பு நடத்தப்பட்ட நிலையில் தற்போது முதல்வருக்கு 5 ஆயிரம் தபால்கள் அனுப்பும் போராட்டம் நடத்தப்பட்டது. இளையான்குடி பொதுமக்கள் இங்குள்ள தபால்நிலையத்திற்கு வந்து புதிய பஸ் நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் வாசகங்கள் கொண்ட தபால்களை அனுப்பினர். 

    இந்த போராட்டத்தில் புதிய பஸ்நிலைய எதிர்ப்புக்குழு  நிர்வாகிகள், பொதுமக்கள் அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பங்கேற்றனர். போராட்டக்குழு செயலாளர் துருக்கி ரபிக்ராஜா கூறு கையில், பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி இளையான்குடி நகருக்கு வெளியே புதிய பஸ் நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 

    பொதுமக்களுக்கு எந்த வகையிலும் பயன்தராத புதிய பஸ் நிலையத்தை ஊருக்கு வெளியே  அமைக்கக் கூடாது. தற்போதுள்ள பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்து புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறோம். ஆனால் அரசு எங்களது கோரிக்கைகளை கண்டுகொள்ளாமல் உள்ளது.  

    எனவே இளையான் குடியில் புதிய பஸ்நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம், சென்னையில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் என அடுத்தடுத்து நடத்த முடிவு செய்துள்ளோம் என்றார். போராட்டம் முடிந்தபின் சுமார்5 மூடைகளில் 5 ஆயிரம் மனுவுடன்கூடிய தபால்கவர்களை தபால் நிலைய அலுவலரிடம் பதிவு செய்து அனுப்ப வழங்கினார். தபால் நிலையத்தில் ஒரே நேரத்தில் ஏராளமானோர் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×