என் மலர்
உள்ளூர் செய்திகள்

நிலக்கரி ஏற்றி செல்லும் லாரிகளுக்கு வாடகையை உயர்த்தாவிட்டால் வேலைநிறுத்தம்- லாரி உரிமையாளர்கள் எச்சரிக்கை
பொன்னேரி:
மீஞ்சூரை அடுத்த காட்டுப்பள்ளியில் தனியார் நிலக்கரி முனையம் உள்ளது. இதேபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் முனையங்களில் இருந்து தனியார் அனல் மின் நிலையங்கள், இரும்பு உருக்கு ஆலை, வாகன டயர்கள் தயாரிக்கும் தொழிற்சாலை, ஹாலோ பிளாக் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் நிலக்கரி கொண்டு செல்லும் பணியில் ஒப்பந்த அடிப்படையில் சுமார் 4 ஆயிரம் டிப்பர் லாரிகள் இயங்கி வருகின்றன.
கடந்த 2020-ம் ஆண்டுக்கு பிறகு லாரி வாடகை உயர்த்தப்படவில்லை என்று தெரிகிறது. இந்தநிலையில் தற்போது அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல், சுங்க கட்டணம், மற்றும் வாகன உதிரி பாகங்களின் விலை உயர்வு காரணமாக லாரி வாடகையை உயர்த்தி தர வேண்டும் என்று டிப்பர் லாரி உரிமையாளர்கள் நிலக்கரி முனைய நிர்வாகிகளிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் சென்னை எண்ணூர், காட்டுப்பள்ளி சுற்றுவட்டார டிப்பர் லாரி மற்றும் ட்ரெய்லர் உரிமையாளர்கள் சங்க கூட்டம் மாதவரத்தில் நடைபெற்றது. இதில் சங்கச் செயலாளர் சுரேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாள் தோறும் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல், விலை உயர்வு மற்றும் சுங்கக் கட்டணம் உயர்வு காரணமாக எங்களால் தொழில் செய்ய முடியாத நிலை உள்ளது. தனியார் நிலக்கரி முனையங்கள் லாரி வாடகை 30 சதவீதம் உயர்த்தி தர வேண்டும். அதற்கான முடிவை மே 1-ந் தேதிக்குள்சம்பந்தப்பட்ட நிலக்கரி முனையங்கள் தெரிவிக்க வேண்டும்.
இல்லையெனில் மே 2 -ந் தேதி முதல் நிலக்கரி கொண்டு செல்லும் டிப்பர் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் தலைவர் சரவணன், பொருளாளர், ஜெயசங்கர், துணைத் தலைவர் லோகநாதன், கிளைச் செயலாளர் ராம்குமார் மற்றும் டிப்பர் லாரி,ட்ரெய்லர் உரிமையாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.






