என் மலர்
உள்ளூர் செய்திகள்

காஷ்மீரில் பஸ் மீது லாரி மோதல்- பள்ளிப்பட்டை சேர்ந்த ராணுவ வீரர் பலி
திருத்தணி:
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள அத்திமாஞ்சேரி பேட்டையை சேர்ந்தவர் எம்.என்.மணி. மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வீரராக பணியாற்றி வந்தார். இவர் தற்போது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பணியாற்றினார்.
இந்த நிலையில் எம்.என்.மணி உள்பட மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் 12 பேர் காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் ஒரு பஸ்சில் சென்று கொண்டிருந்தனர்.
ஹைடர் போரா என்ற இடத்தில் சென்று கொண்டு இருந்த போது வீரர்கள் சென்ற பஸ் மீது அந்த வழியாக சென்ற லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ் பலத்த சேதம் அடைந்தது.
இந்த விபத்தில் பஸ்சில் இருந்த தமிழக வீரர் எம்.என்.மணி பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அந்த பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மணி பரிதாபமாக இறந்தார். மற்ற வீரர்கள் லேசான காயங்களுடன் தப்பினர்.
பாதுகாப்பு படை வீரர் எம்.என்.மணி பலியானது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை கேட்டதும் அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். பாதுகாப்பு படை வீரர் எம்.என்.மணியின் உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
விபத்தில் உயிரிழந்த மணிக்கு இரங்கல் தெரிவித்து டாக்டர். அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் நிகழ்ந்த சாலை விபத்தில் பள்ளிப்பட்டைச் சேர்ந்த துணை ராணுவ வீரர் எம்.என்.மணி வீர மரணம் அடைந்த செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். நாட்டைக் காக்கும் பணியில் இன்னுயிரை ஈந்த மணிக்கு பா.ம.க. சார்பில் வீரவணக்கம் செலுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






