search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழை
    X
    மழை

    சேலம் மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை

    சூறாவளி காற்றினால் பெய்த மழைக்கு சில இடங்களில் இரவு 1 மணிநேரம் மின் விநியோகம் தடைபட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. காலையில் வெயிலில் தாக்கம் அதிகமாக உள்ளது. மாலையில் கன மழை கொட்டுகிறது.

    இந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம்போல வெயில் வாட்டியது. பின்பு மாலையில் இதமான காற்று வீசியது. இரவு திடீரென கருமேகங்கள் சூழ்ந்தன. பின்பு பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது.

    மாவட்டத்தில் கரிய கோவில், ஆத்தூர், ஏற்காடு, ஓமலூர், சேலம் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் பெய்த கனமழை சுமார் ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    சேலத்தில் பழைய பஸ் நிலையம், கிச்சிப்பாளையம், சன்னியாசி குண்டு, அம்மாபேட்டை, குகை, அழகாபுரம், ஆகிய பகுதிகளில் சாக்கடை நீரும் மழை நீரும் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதையடுத்து இன்று காலையில் மாநகராட்சி ஊழியர்கள் சாக்கடை அடைப்புகளை அப்புறப்படுத்தி மழைநீரை அகற்றினர்.

    சூறாவளி காற்றினால் பெய்த மழைக்கு சில இடங்களில் இரவு 1 மணிநேரம் மின் விநியோகம் தடைபட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர்.

    வாழப்பாடி அருகே தும்பல், இடையப்பட்டி, பனைமடல் செக்கடிப்பட்டி, வெள்ளாளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. சூறைக்காற்றுடன் பெய்த மழையில் ஏராளமான வாழை மரங்கள், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்தன. இதுகுறித்து வருவாய்த்துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி, அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்து நிவாரணத் தொகை பெற்றுக் கொடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இடையப்பட்டி புதூர் பகுதியில் நேற்று மாலை வானத்தில் வானவில் தோன்றியது. இதனை இப்பகுதி சிறுவர்கள் மட்டுமன்றி அனைவரும் கண்டுமகிழ்ந்தனர்.

    சேலம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-

    கரியகோவில்-64, சேலம்-22.8, ஆணைமடுவு-21, தம்மம்பட்டி-20, ஓமலூர்-17, ஏற்காடு-14, கடையாம்பட்டி-10, பெத்தநாயக்கன் பாளையம்-8, ஆத்தூர்-2.

    தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.பெரும்பாலான இடங்களில் கோடை உழவு முடிந்துள்ள நிலையில் தற்போது பெய்துவரும் மழை வேளாண்மைக்கு உகந்ததாக உள்ளதாக விவசாயிகள் கூறினர்.

    Next Story
    ×