search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அதிமுக
    X
    அதிமுக

    சென்னையில் 450 அ.தி.மு.க. பகுதி பொறுப்பாளர்கள் மீண்டும் தேர்வு

    சென்னையில் திருவிழா போல நடந்த உள்கட்சி தேர்தலில் போட்டி போட்டு விருப்ப மனு கொடுத்தனர். மாவட்ட செயலாளர்கள் தலைமையில் நடந்த தேர்தலில் பல இடங்களில் போட்டி ஏற்பட்டதால் வாக்குவாதம் உண்டானது.

    சென்னை:

    அ.தி.மு.க. அமைப்பு தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. 3-வது கட்டமாக பகுதி கழக நிர்வாகிகளுக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது.

    சென்னையில் உள்ள 9 மாவட்டங்களுக்கு தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டன. பகுதி அவைத் தலைவர், பகுதி செயலாளர், இணை செயலாளர், துணை செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட 9 பொறுப்புகளுக்கு இத்தேர்தல் நடந்தன.

    சென்னையில் திருவிழா போல நடந்த உள்கட்சி தேர்தலில் போட்டி போட்டு விருப்ப மனு கொடுத்தனர். மாவட்ட செயலாளர்கள் தலைமையில் நடந்த தேர்தலில் பல இடங்களில் போட்டி ஏற்பட்டதால் வாக்குவாதம் உண்டானது.

    ஆனாலும் மாவட்ட நிர்வாகிகள் அவர்களை சமாதானப்படுத்தி தேர்தலை சுமூகமாக நடத்தி முடித்தனர். ஒரே பதவிக்கு ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் போட்டியிட்டதால் அவர்களை அழைத்து பேசி வேறு பொறுப்புகளில் நியமிக்க வாய்ப்பு கொடுப்பதாக உறுதியளித்தனர்.

    அதன் பேரில் போட்டி ஏற்பட்ட இடங்களில் வாபஸ் பெறப்பட்டு தேர்தல் இல்லாமல் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    சென்னையில் 16 சட்டசபை தொகுதிகள் உள்ளன. தொகுதிக்கு 2 அல்லது 3 பகுதிகள் வீதம் செயல்படுகின்றன. தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு 450 தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் பட்டியலும் தலைமைக்கு மாவட்ட செயலாளர்கள் அனுப்பி விட்டனர்.

    இதுகுறித்து வடசென்னை மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் கூறும்போது, எனது மாவட்டத்தில் பெரம்பூர், ஆர்.கே.நகர் 2 சட்டமன்ற தொகுதிகளில் 6 பகுதிகள் உள்ளன. 54 பகுதி பொறுப்புகளுக்கு 330 பேர் விருப்ப மனு கொடுத்தனர். தேர்தல் கட்டணமாக ரூ.8 லட்சம் வசூலிக்கப்பட்டது.

    போட்டி அதிகம் இருந்த பகுதிகளில் நிர்வாகிகளை அழைத்து பேசி மற்ற அணிகளில் வாய்ப்பு அளிப்பதாக கூறியதை தொடர்ந்து வாபஸ் பெற்றுக் கொண்டனர். இதனால் தேர்தல் இல்லாமல் போட்டியின்றி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு பட்டியல் தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

    தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் கூறும்போது, ஆயிரம்விளக்கு, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி ஆகிய தொகுதிகளில் 6 பகுதிகளில் உள்ள 54 பொறுப்புகளுக்கு தேர்தல் முறையாக நடத்தி முடிக்கப்பட்டன.

    கட்சியை விட்டு வெளியேறியவர்கள், காலியான இடங்களுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மற்ற பொறுப்புகளுக்கு பழைய நிர்வாகிகள் தொடர்ந்து நீடிக்கிறார்கள் என்றார்.

    இதையடுத்து மாவட்ட செயலாளர்கள் தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. 9 மாவட்டங்களில் உள்ள பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

    மாவட்ட அவை தலைவர், மாவட்ட செயலாளர், இணை செயலாளர், துணை செயலாளர்-2 பேர், பொருளாளர், 2 பொதுக்குழு உறுப்பினர்கள், ஒரு செயற்குழு உறுப்பினர் என 9 பொறுப்புகளுக்கு தேர்தல் நடக்கிறது.

    சென்னை மாவட்டங்களில் 81 பொறுப்புகளுக்கு தேர்தல் நடந்து பொறுப்பாளர்கள் விரைவில் நியமிக்கப்படுகிறார்கள்.

    மாவட்ட செயலாளர்களாக டி.ஜெயக்குமார், பாலகங்கா, வெங்கடேஷ்பாபு, ஆதிராஜாராம், ஆர்.எஸ்.ராஜேஷ், வி.என்.ரவி, கே.பி.கந்தன், அசோக், சத்யா ஆகியோர் தற்போது உள்ளனர். இப்போது உள்ள சூழ்நிலையில் அவர்களே நீடிப்பார்கள். மாற்றம் செய்வதற்கான வாய்ப்பு இல்லை.

    இதையும் படியுங்கள்... ஆலங்குடி குருபகவான் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் தீவிரம்

    Next Story
    ×