search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூட்டத்தில் கலந்துகொண்ட மேயர், துணை மேயர்கள், நகராட்சி தலைவர்கள்
    X
    கூட்டத்தில் கலந்துகொண்ட மேயர், துணை மேயர்கள், நகராட்சி தலைவர்கள்

    கலைவாணர் அரங்கில் மேயர்கள்-துணை மேயர்கள், நகராட்சி தலைவர்களுக்கு பயிற்சி

    சென்னை கலைவாணர் அரங்கில் மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி தலைவர்களுக்கு நடைபெறும் பயிற்சி வகுப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை பங்கேற்று பேசுகிறார்.
    சென்னை:

    தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி மேயர்கள், நகராட்சி தலைவர்கள், கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாமன்ற கூட்டத்தை நடத்தி உள்ளனர்.

    தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் மாமன்ற கூட்டம் நடந்தாலும் பெரும்பாலான மேயர்கள் இந்த பதவிக்கு புதிது என்பதால் மன்ற கூட்டத்தை எப்படி நடத்தி செல்ல வேண்டும் என்பது பற்றி அவர்களுக்கு முழுமையாக விதிகள் தெரியவில்லை. இதேபோல் நகராட்சி மன்ற கூட்டங்களிலும் பல தலைவர்களுக்கு கூட்டம் நடத்துவதில் சிரமம் ஏற்பட்டது.

    இதையொட்டி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி தலைவர்கள், துணை தலைவர்களுக்கு நிர்வாக பயிற்சி கொடுக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.

    அதன்படி சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை பயிற்சி வகுப்புகள் தொடங்கியது. இந்த பயிற்சி வகுப்பில் சென்னை, தாம்பரம், ஆவடி உள்பட 21 மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், 190 நகராட்சி தலைவர்கள், 190 நகராட்சி துணை தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த பயிற்சி வகுப்பை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். கலைவாணர் அரங்கத்தில் 3-வது தளத்தில் 21 மாநகராட்சி மற்றும் துணை மேயர்களுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது. தரை தளத்தில் 138 நகராட்சி தலைவர் மற்றும் நகர்மன்ற துணை தலைவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது

    அப்போது மாமன்ற கூட்டம் நடத்துவது தொடர்பான கையேட்டினையும் அவர் வெளியிட்டு விளக்கம் அளித்தார்.

    இதில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு சிறப்புரையாற்றினார்கள். நிகழ்ச்சிக்கு உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

    இதில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, ஆர்.எஸ்.பாரதி எம்.பி., எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. உள்பட பலர் பங்கேற்று பேசினார்கள்.

    உள்ளாட்சி அமைப்பில் பொறுப்பு வகித்து உயர்ந்த பதவிகளுக்கு வந்துள்ள பலரும் உள்ளாட்சி பிரதிநிதிகள் எவ்வாறு செயல்பட வேண்டும், சிக்கலான நேரத்தில் சாதுர்யமாக செயல்பட்ட முறைகளை எடுத்துக்கூறினர். முகாமில் பேசிய பல துறைகளை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அதிகாரங்கள், அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுத்தும் முறை, மக்கள் திட்டங்கள் வழிமுறை உள்ளிட்டவற்றை பற்றி விளக்கம் அளித்தனர்.

    இன்று மாலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகிறார். அப்போது மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி தலைவர்களுக்கு உள்ளாட்சி நிர்வாகம் பற்றி பல்வேறு ஆலோசனை வழங்க உள்ளார்.


    Next Story
    ×