search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சொத்து வரியை உயர்த்தக்கூடாது - பின்னலாடை துறையினர் வலியுறுத்தல்

    ஜி.எஸ்.டி., பணம் மதிப்பிழப்பு, கொரோனா பரவல் என அடுத்தடுத்த பிரச்சினைகளால் கடந்த 5 ஆண்டுகளாக, பின்னலாடை உற்பத்தி துறை பாதிக்கப்பட்டுள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் குடியிருப்பு, தொழிற்சாலை, வணிக கட்டடம், கல்வி பயன்பாட்டு கட்டடங்களுக்கான வரி 25 முதல் 150 சதவீதம் வரை உயர்த்தி வசூலிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

    திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரி உயர்வு தொடர்பாக சிறப்புக்கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. திருப்பூர் பின்னலாடை தொழில் அமைப்பினரிடம் இது தொடர்பாக கேட்டபோது அவர்கள் கூறியதாவது:

    திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம்:

    ஏற்கனவே ஏராளமான பிரச்சினைகளால் திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறை தத்தளித்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள வரியே போதுமானது தான். இதற்கு மேலும் வரி உயர்த்தி மக்கள், தொழில்முனைவோரை கோபமூட்டக்கூடாது. வரி அதிகரித்தால் தொழில் துறை கடும் பாதிப்புகளை சந்திக்கும். அடுத்த சில ஆண்டுகளுக்கு சொத்து வரியை உயர்த்தக்கூடாது.

    திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க(டீமா) தலைவர் முத்துரத்தினம்:

    ஜி.எஸ்.டி., பணம் மதிப்பிழப்பு, கொரோனா பரவல் என அடுத்தடுத்த பிரச்சினைகளால் கடந்த 5 ஆண்டுகளாக, பின்னலாடை உற்பத்தி துறை பாதிக்கப்பட்டுள்ளது. அபரிமிதமான பஞ்சு, நூல் விலை உயர்வால் பாதிப்புகள் மேலும் அதிகரித்துள்ளன.சொத்து வரியை உயர்த்துவது தொழில் வளர்ச்சியை மேலும் பாதிக்கச்செய்யும்.

    திருப்பூரை பொறுத்தவரை பெரும்பாலான நிறுவனங்கள் வாடகை கட்டடத்திலேயே இயங்குகின்றன. வரி உயர்ந்தால், கட்டட வாடகை உயர்ந்து தொழில்முனைவோருக்கு சுமையை ஏற்படுத்தும். அதேபோல் குடியிருப்புகளின் வாடகை உயர்ந்து பின்னலாடை தொழிலாளர் மீதும் வரிச்சுமை விழும். நாட்டின் வளர்ச்சிக்கு வரி அவசியம்தான்.

    தொழில் வளர்ச்சிப்பாதையில் செல்லும்போது, வரி உயர்ந்தாலும் பெரிதாக தெரியாது. ஏராளமான இன்னல்களை சந்தித்துவரும் இச்சூழலில் வரி உயர்வு அறிவிப்பு வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் உள்ளது. வரி உயர்ந்தால் பின்னலாடை துறை மேலும் பாதிப்புக்குள்ளாகும். எனவே இப்போது, சொத்து வரி உயர்வு கூடாது என்றார்.
    Next Story
    ×