search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X
    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

    கேரள மார்க்சிஸ்ட் மாநாட்டில் முதல்வர் பங்கேற்கக் கூடாது- 5 மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தல்

    முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் தொடர்ந்து தமிழகத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வரும் கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தமிழக முதல்வர் பங்கேற்கக் கூடாது என 5 மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கூடலூர்:

    தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட முல்லை பெரியாறு அணை நீரினை பயன்படுத்தும் 5 மாவட்ட விவசாய சங்கம் சார்பில் தமிழக முதல்வருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23 வது மாநில மாநாடு இன்று 6ம் தேதி முதல் 10ம் தேதி வரை கண்ணூரில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    கேரள மாநில தேவசம்போர்டு அமைச்சரான ராதாகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணனுடன் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேரில் அழைப்பு விடுத்துள்ளார்.

    முல்லை பெரியாறு பிரதான அணையிலிருந்து பேபி அணைக்கு செல்லும் வழியில் 15 மரங்களை வெட்டுவதற்கு உத்தரவிட்ட கேரள மாநில தலைமை வனப்பாதுகாவலரை பணியிடை நீக்கம் செய்வதற்கு திட்டத்தை வகுத்துக் கொடுத்தவர் தேவசம்போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன்.

    இவர் தமிழக முதல்வரை சந்தித்தது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. பேபி அணையில் மரம் வெட்டுவதற்கு அனுமதி கொடுத்ததற்காக தமிழக முதல்வரின் நன்றி கடிதத்தை தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கேரள மாநில வனத்துறை அமைச்சர் சுசீந்திரன் உதாசினப்படுத்தினார்.

    ஒருபுறம் தமிழக முதல்வரையே மரியாதைக் குறைவாக நடத்துவது, மற்றொரு புறம் எதுவும் தெரியாததுபோல பழகுவது என்ற கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உள்நோக்கத்தை தமிழக முதல்வர் புரிந்துகொள்ள வேண்டும்.

    எனவே கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது மாநில மாநாட்டை தமிழக முதல்வர் புறக்கணிக்க வேண்டும் என பெரியாறு - வைகை பாசன 5 மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×