என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதுவை நகர பகுதியில் மீன்களை இறக்க போலீசார் அனுமதி மறுப்பு- மீனவர்கள் போராட்டம்
புதுச்சேரி:
புதுவை நகர பகுதியில் நேருவீதி, காந்தி வீதி சந்திப்பில் குபேர் மீன் அங்காடி பாரம்பரியமாக பிரெஞ்சு காலத்தில் இருந்து செயல்பட்டு வருகிறது.
நகரப்பகுதியில் போக்கு வரத்து நெரிசலை தவிர்க்க புதுவை அரசு நவீன மீன் அங்காடியை கிழக்கு கடற்கரையில் கட்டியுள்ளது. 5 ஆண்டுகளாகியும் மீனவர்கள் யாரும் அங்கு செல்லவில்லை.
இதனால் நகர பகுதியில் மீன்களை இறக்க அரசு 2 ஆண்டுகளுக்கு முன் தடை விதித்தது. இருப்பினும் மீனவர்கள் நேருவீதியில் அதிகாலையில் வாகனங்களை நிறுத்தி மீன்களை இறக்கிச் செல்வது தொடர்கதையாகி வருகிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலை மீன்களை இறக்க வந்த வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் மீனவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மீன்களை இறக்க அனுமதிக்க வலியுறுத்தி டிரைவர்கள், மீன் விற்கும் பெண்கள் என 100-க்கும் மேற்பட்டோர் நேருவீதி, காந்திவீதி சந்திப்பில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
காலை நேரத்தில் பெரிய மார்க்கெட்டுக்கு பொருட்களை வாங்க வந்த வியாபாரிகள், பொதுமக்கள் வாகனங்களால் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.
போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அரசின் உத்தரவையே செயல்படுத்துவதாக தெரிவித்தனர்.தொடர்ந்து இன்று மீன்களை இறக்க அனுமதிப்பதாகவும் அரசுடன் பேசி முடிவு காணுமாறும் போலீசார் அறிவுறுத்தினர். இதையடுத்து போராட்டத்தை மீன் விற்கும் பெண்கள் கைவிட்டனர்.
நகர பகுதியில் மீன்களை விற்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி முதல்- அமைச்சரை சட்டசபையில் சந்திப்பது என முடிவு செய்துள்ளனர். இதனால் இன்று அதிகாலை சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.






