search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்
    X
    பெண்

    மூலிகை எண்ணெய் அனுப்புவதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.25 லட்சம் மோசடி செய்த பெண்

    மூலிகை எண்ணெய் அனுப்புவதாக கூறி கோவை தொழில் அதிபரிடம் ரூ.25 லட்சம் மோசடி செய்த பெண் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோவை:

    கோவை சுந்தராபுரம் அருகே உள்ள மாச்சம்பாளையத்தை சேர்ந்தவர் தினேஷ் சங்கர் (வயது 46). தொழில் அதிபர். கடந்த மாதம் இவரது பேஸ்புக்கிற்கு ஒரு பெண்ணிடம் இருந்து நட்பு அழைப்பு வந்தது. இதனையடுத்து தினேஷ் சங்கர் இதற்கு ஒப்புதல் அளித்தார்.

    தொடர்ந்து அந்த பெண் தான் லண்டனில் வசிப்பதாகவும், தன்னுடைய பெயர் குளோரியா என அறிமுகம் செய்து கொண்டார். இதனை உண்மை என நம்பிய தினேஷ் சங்கர் அந்த பெண்ணுடன் நட்பாக பழகி வந்தார். அப்போது அந்த பெண் இவரிடம் தான் ஒரு மருந்து நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகவும், மூலிகை எண்ணெய் விற்பனை செய்ய டீலரை தேடுவதாகவும் கூறினார். மேலும் குளோரியா, தினேஷ் சங்கரிடம் நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள் உங்களுக்கு இதில் ஆர்வம் உள்ளதா? என கேட்டார். இதற்கு தான் தொழில் அதிபர் என கூறி உள்ளார்.

    அவரிடம் அந்த பெண் நீங்கள் வேண்டுமானால் எண்ணெயை இறக்குமதி செய்யுங்கள், நான் குறைந்த விலைக்கு மூலிகை எண்ணெய் உங்களுக்கு கிடைக்க உதவி செய்கிறேன் என கூறினார். இதற்கு தினேஷ் சங்கர் சம்மதம் தெரிவித்தார். இதனையடுத்து குளோரியா இந்தியாவில் உள்ள சர்மா டிரேடிங் நிறுவனத்தில் இருந்து உங்களை அழைப்பார்கள். அவர்கள் கட்ட சொல்லும் பணத்தை கட்டினால் மூலிகை எண்ணெய் உங்களுக்கு அனுப்பி வைப்பார்கள் என கூறினார்.

    சில மணி நேரத்தில் லண்டன் பெண் கூறியது போல ஒரு நபர் தினேஷ் சங்கரை தொடர்பு கொண்டார். அவர் உடனடியாக ரூ.25 லட்சத்து 10 ஆயிரம் பணத்தை வங்கியில் செலுத்தினால் மூலிகை எண்ணெய் உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும் என கூறினார். இதனை உண்மை என நம்பிய தினேஷ் சங்கர் அந்த நபர் கொடுத்த வங்கி கணக்கில் ரூ.25 லட்சத்து 10 ஆயிரம் பணத்தை செலுத்தினார். பணம் செலுத்தி நீண்ட நாள் ஆகியும் மூலிகை எண்ணெய் வரவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த தினேஷ் சங்கர் லண்டன் பெண்ணை தொடர்பு கொண்டபோது அந்த எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதேபோல அந்த பெண் மூலிகை எண்ணெய் அனுப்புவதாக கூறிய சர்மா டிரேடிங் கம்பெனி எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தினேஷ் சங்கர் இது குறித்து மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×