என் மலர்
உள்ளூர் செய்திகள்

சுற்றுலா தலமாக மாற்ற ஆய்வு
மகிபாலன்பட்டி ஊராட்சியை சுற்றுலா தலமாக மாற்ற ஆய்வு
கணியன் பூங்குன்றனார் பிறந்த மகிபாலன்பட்டி ஊராட்சியை சுற்றுலா தலமாக மாற்ற ஆய்வு நடக்கிறது.
திருப்பத்தூர்
கற்காலம் தொட்டு எத்தனையோ சங்ககால புலவர்கள் காலத்தால் அழியாத பொக்கிஷமாக இருக்கக்கூடிய பல இலக்கியங்களையும், கவிதைகளையும், அறநெறி நிறைந்த பாக்களையும், மக்களுக்காக வழங்கி சென்றுள்ளனர்.
அப்படி எத்தனையோ புலவர்கள் வந்தபோதிலும், ”யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற ஒற்றை குறல் அடிகளின் மூலம் முழு உலக மாந்தர்கள் அனைவரையும் ஒன்றிணைத்த பெருமையை உலகத்திற்கு தந்த சங்ககால புலவர்களில் ஒருவராக விளங்கும் கணியன் பூங்குன்றனார் பிறந்த ஊரான சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சி அருகே மகிபாலன்பட்டியை சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதற்கான திட்டம் தயாரிக்கும் பணிக்காக தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பூங்குன்றனாருக்கு எழுப்பப்பட்டுள்ள நினைவு துணை சுற்றியுள்ள பகுதிகளை ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன் தலைமையில் தமிழக நீர் மேலாண்மை ஒருங்கிணைப்பாளர் முரளி, தேசிய நவீன நீர்வழிச்சாலை ஒருங்கிணைப்பாளர் தனுவேல்ராஜ் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தாசன் ஆகியோர் அடங்கிய குழு இப்பகுதியை ஆய்வு செய்தனர்.
தமிழுக்காக பல சங்கங்கள் வைத்துமொழி உணர்வையும், நாட்டுப்பற்றையும் ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், அதன் காரணமாக இன்றளவும் உலக மக்கள் வியந்து பார்க்க கூடிய அளவிற்கு பல்வேறு நாடுகளில் ஆட்சி மொழியாகவும் தமிழ் மொழி திகழ்ந்து வருவதற்கு சங்ககாலப்புலவர்கள் தமிழ் மொழி மீது கொண்ட பற்று ஒன்றே என்றால் அது மிகையாகாது.
அத்தகைய தமிழ் மொழியினை “செம்மொழி” என்று பறைசாற்றி வரும் தமிழக அரசு அதற்கான வளர்ச்சித்துறைகளையும் பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இருந்தபோதிலும் மொழிக்காக வாழ்ந்த ஒரு சமுதாயம் என்ற சரித்திரத்தை வருங்கால சந்ததியினரும் உணரும் விதத்தில் ஒரே வரியில் உலகை வியப்பில் ஆழ்த்திய பூங்குன்றனார் பிறந்த இந்த மண்ணை சுற்றுலா தலமாகவும், பல்வேறு சங்ககால புலவர்களின் வாழ்க்கை வரலாறு குறிப்புகள் அடங்கிய ஒரு நினைவு மண்டபத்தையும் இப்பகுதிகளில் எழுப்ப வேண்டும் என்பது தமிழ் வளர்ச்சி வல்லுநர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது
Next Story






