search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புத்தக கண்காட்சி
    X
    புத்தக கண்காட்சி

    சிவகங்கையில் வருகிற 15-ந் தேதி மாபெரும் புத்தக கண்காட்சி

    சிவகங்கையில் புத்தக திருவிழா வருகிற 15ந்தேதி முதல் 25ந்தேதி வரை 11 நாட்கள் சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

    புத்தகம் வாசிப்பு என்பது மனிதனுக்கு மிகவும் அவசியமானதாகும். பொதுமக்களின் எண்ணம் மற்றும் சிந்தனைகளை ஆக்கப்பூர்வமானதாக ஆக்குவதற்கும் அடிப்படையாக அமைகிறது.

    தற்சமயம் சமூக வலைதளங்கள் வாயிலாக வெளியிடும் செய்திகளை மட்டுமே வைத்து பொதுமக்கள் தங்களின் பொது அறிவுத்திறனை வளர்த்து வருகிறார்கள். புத்தக வாசிப்புத்திறனை அதிகப்படுத்திடும் போது அறிவுத்திறனை மேம்படுத்த முடியும்.

    புத்தகவாசிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் புத்தக திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    அதன்படி, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிவகங்கை நகர்ப்பகுதியில் முதன் முறையாக பெரிய அளவில் புத்தகத் திருவிழாவினை பபாசி அமைப்புடன் இணைந்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த புத்தகதிருவிழா வருகிற 15ந்தேதி முதல் 25ந்தேதி வரை 11 நாட்கள் சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.

    இந்த புத்தகத்திருவிழா புத்தக பதிப்பாளர்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்கள் ஆகியோர்களைக் கொண்டு நடைபெற உள்ளது. புத்தகத் திருவிழாவில் 110அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. அதில், 100 அரங்குகள் புத்தகக் கண்காட்சிகளுக்கும், 10அரங்குகள் அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு அறிந்து கொள்ளும் வகையிலும் அமைக்கப்படவுள்ளது.

    மேலும், 600 பேர் அமரும் வகையில் மிகப்பெரிய அரங்கு அமைக்கப்பட்டு, அதில் தினந்தோறும் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை மாணவ, மாணவிகளிடையே இலக்கியம் சார்ந்த பல்வேறு போட்டிகள் மற்றும் 1 மணிநேரம் கூட்டாக புத்தக வாசிப்பு நிகழ்ச்சியும், சிறுவர்களுக்கான குறும்படங்களை அனைத்து மொழிகளிலும் திரையிடுவதற்கென சிறிய திரையரங்கும் மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு பேச்சாளர்கள், பட்டிமன்றங்கள், நாட்டுப்புற கலைஞர்களைக் கொண்ட கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பாரம்பரிய உணவுப் பொருட்களை கொண்ட உணவகங்களும் அமைக்கப்பட உள்ளது.

    புத்தகத்திருவிழாவினை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரி களைச் சார்ந்த மாணவ, மாணவிகள் தினந்தோறும் வருகை புரிந்து பார்த்து பயன்பெறும் வகையில், தனித்தனியாக நேரம் ஒதுக்கீடு செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு ஊராட்சிகளிலும் மக்கள் வருகை புரிவதற்கும், சம்பந்தப் பட்ட ஊராட்சி மன்றத்தலைவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் எளிதில் புத்தகத் திருவிழாவிற்கு வந்து செல்லும் வகையில் போக்குவரத்து வசதிகளும் ஏற்படுத்தப்படுத்தப்பட்டு, குடிநீர் வசதி, கழிப்பிடவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைக்கப்பட உள்ளது.

    பொதுமக்களுக்கு வாசிப்புத்திறன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இப்புத்தகத் திருவிழா சிறப்பாக நடைபெற உள்ளது. இதனை பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் பயன்படுத்திக் கொண்டு தங்களது அறிவுத்திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கலெக்டரின்நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வீரராகவன், செய்திமக்கள்தொடர்பு அலுவலர் நாகராஜபூபதி ஆகியோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×