என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஈரோட்டில் தடையை மீறி போராட்டம் நடத்திய பா.ஜனதா பெண் எம்.எல்.ஏ. உள்பட 24 பேர் மீது வழக்கு
ஈரோடு:
ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் நிலத்தை மீட்க கோரி நேற்று 5001 சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெறும் என பெரிய மாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்யப்படுவர் என்றும் எச்சரித்திருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று காலை பெரிய மாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்கத்தினர் 200-க்கும் மேற்பட்டோர் ஈரோடு ஈஸ்வரன் கோவில் முன்பு திரண்டனர். இந்நிலையில் மொடக்குறிச்சி சரஸ்வதி எம்.எல்.ஏ. தலைமையில் 16 நிர்வாகிகள், இந்து முன்னணி நிர்வாகிகள் என மொத்தம் 24 பேர் திடீரென பெரிய மாரியம்மன் கோவில் முன்பு தடையை மீறி தேங்காய் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் டவுன் போலீசார் மொடக்குறிச்சி பா.ஜனதா எம்.எல்.ஏ. சரஸ்வதி உள்பட 24 நிர்வாகிகளை கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலை அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் தடையை மீறி தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட சரஸ்வதி எம்.எல்.ஏ. உள்பட 24 பேர் மீது டவுன் போலீசார் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.






