என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீயில் எரிந்து நாசமான கார் மற்றும் மோட்டார் சைக்கிளை படத்தில் காணலாம்.
    X
    தீயில் எரிந்து நாசமான கார் மற்றும் மோட்டார் சைக்கிளை படத்தில் காணலாம்.

    சிதம்பரம் அருகே தி.மு.க. கவுன்சிலர் கார்- மோட்டார் சைக்கிள் எரிப்பு?

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தி.மு.க. கவுன்சிலர் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் தீவைத்து எரிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேத்தியாத்தோப்பு:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள வளையமாதேவி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் புவனகிரி யூனியன் 5-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக உள்ளார்.

    நேற்று இரவு வீட்டில் தனது குடும்பத்துடன் தூங்கினார். வீட்டு முன்பு அவரது கார், மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தார்.

    இரவு நேரத்தில் காரில் திடீரென்று தீப்பிடித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த தீ அருகே நின்ற மோட்டார் சைக்கிள் மீதும் பற்றியது.

    இதனால் அந்த இடம் ஒரே புகைமண்டலமாக காட்சி அளித்தது. அதிர்ச்சி அடைந்த செல்வராஜ் வீட்டில் இருந்து வெளியே வந்தார்.

    தீ கொளுந்து விட்டு எரிவதை பார்த்து பதறினார். இது குறித்து உடனடியாக சேத்தியாத்தோப்பு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த மாவட்ட உதவி அலுவலர் ஆறுமுகம் தலைமையிலான தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

    எனினும் கார், மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிந்து நாசமானது. இது குறித்து செல்வராஜ் சேத்தியாத்தோப்பு போலீசில் புகார் செய்தார். அதில், அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக யாரோ எனது கார், மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்திருக்கலாம் என சந்தேகிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

    அதனடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா வழக்குப்பதிவு செய்துள்ளார். செல்வராஜ் தெரிவித்துள்ளபடி கார், மோட்டார் சைக்கிளுக்கு யாராவது தீ வைத்தார்களா? அவரது வீட்டுக்கு வந்து சென்ற நபர்கள் யார்? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×