என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    காதலிக்க சொல்லி சிறுமியை மிரட்டிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

    கோபிசெட்டிபாளையம் அருகே காதலிக்க சொல்லி சிறுமியை மிரட்டிய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டுப்பாளையம் பகுதியைச்சேர்ந்த 13 வயது சிறுமி தினமும் அதே பகுதியில் உள்ள கூட்டுறவு பால் பண்ணைக்கு சைக்கிளில் பால் ஊற்ற சென்று வந்தார்.

    இந்த நிலையில் ஒட்டக்கரட்டுப்பாளையத்தைச் சேர்ந்த சென்னியப்பன் என்பவரது மகன் நந்தகுமார் (23) என்பவர் தினமும் சிறுமியை பின் தொடர்ந்து செல்போன் மூலம் போட்டோ எடுத்து வந்து உள்ளார்.

    சம்பவத்தன்று சிறுமி வழக்கம் போல் சைக்கிளில் கூட்டுறவு பால் பண்ணையில் பால் ஊற்றி விட்டு மீண்டும் தனது வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது நந்தகுமார் தனது மோட்டார் சைக்கிளில் சிறுமி மீது மோதுவது போல் பயமுறுத்தி உள்ளார். மேலும் நான் உன்னை காதலிக்கிறேன். நீயும் என்னை காதலிக்க வேண்டும் நான் கூப்பிடும்போது என்னுடன் வரவேண்டும். இல்லை என்றால் உன்னை வாழ விடமாட்டேன். என் பேச்சை கேட்காவிட்டால் உன் போட்டோக்களை எடிட் செய்து என் நண்பர்களுக்கு அனுப்பி விடுவேன். இது பற்றி உனது பெற்றோர்களிடம் தெரிவித்தால் உன்னையும், அவர்களையும் கொன்று விடுவேன் என்று மிரட்டல் விடுத்து உள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி நடந்த விவரங்களை தனது தந்தையிடம் தெரிவித்தார். இதையடுத்து சிறுமியின் தந்தை கோபிசெட்டி பாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி நந்தகுமார் மீது போக்சோ மற்றும் கொலை மிரட்டல் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    Next Story
    ×