search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்திருப்பேரை  மகர நெடுங்குழைக்காதர் கோவில் தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.
    X
    தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவில் தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.

    தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவில் பங்குனி திருவிழா தேரோட்டம்

    தென்திருப்பேரை ஸ்ரீ மகர நெடுங்குழைக்காதர் கோவிலில் பங்குனி உத்தரதிருவிழாவின் 9- ம் நாள் திருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடைபெற்றது.
    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நவதிருப்பதி கோவில்களில் 7-வது தலமானதும், 108 திவ்ய தேசங்களில் 53-வது தலமாகவும் சுக்கிரன் தலமாக அமையப் பெற்ற தலம் தென்திருப்பேரை ஸ்ரீ மகர நெடுங்குழைக்காதர் கோவில் ஆகும்.

    தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் தென்திருப் பேரையில் மீன் வடிவ காதணி அணிந்த ஸ்ரீமகர நெடுங்குழைக்காதர், குழைக்காதர் நாச்சியார், திருப்பேரை நாச்சியார் ஆகியோருடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

    இங்கு ஆண்டு தோறும் பங்குனி மாதம் 10 நாட்கள் திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா கடந்த 18-ந் தேதி காலை 8 மணிக்கு மேல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 22-ந் தேதி இரவு கருட சேவை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    9- ம் நாள் திருவிழாவை முன்னிட்டு இன்று காலை உற்சவர் நிகரில் முகில்வண்ணன் தேரில் எழுந்தருளினார்.அதை தொடர்ந்து 9 மணி அளவில் தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்ட நிகழ்ச்சியில் வள்ளியூர் குழைக்காதர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் திருத்தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.

    அதன்பின் தேர் கீழரத வீதியிலிருந்து புறப்பட்டு தெற்கு ரதவீதி வழியாக மேலரத வீதிவரை பக்தர்கள் வடம் பிடித்து கோவிந்தா... கோவிந்தா... என கரகோஷத்துடன் இழுத்து வந்தனர்.  பின்பு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தேரோட்டம் நிறுத்தப்பட்டு மாலையில் மீண்டும் தேரோட்டம் மேலரத வீதியில் இருந்து புறப்பட்டு வடக்கு ரதவீதி வழியாக வந்து மீண்டும் கோவில் நிலையை வந்து அடையும். இன்று தாமிரபரணி நதியில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற்றது.
     
    தென்திருப்பேரை மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பக்தர்கள் தேரோட்டத்தில் கலந்து கொண்டனர்.  பக்தர்களுக்கு நீர், மோர், அன்னதானம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் வள்ளியூர் பெரி.குழைக்காதர் மற்றும் குடும்பத்தினர், தென்திருப்பேரை பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த், துணை தலைவர் அமிர்தவள்ளி, செயல் அலுவலர் ரமேசு பாபு, ஸ்ரீநிகரில் முகில்வண்ணன் கைங்கர்யசபா டிரஸ்ட் தலைவர் சுந்தரராஜன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி, மாரி துரைசாமி, ஆழ்வை கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் விஜயகுமார், நகர செயலாளர் ஆறுமுகநயினார்,  பேரூராட்சி கவுன்சிலர்கள் ஆனந்த், சண்முகசுந்தரம், லெட்சுமி கனகசெல்வம், குமரேசன், ரேவதி மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண் டனர்.

    ஸ்ரீவைகுண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேசன் தலைமையில் ஆழ்வார் திருநகரி இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், சப்--இன்ஸ் பெக்டர் செல்வன் மற்றும் போலீசார், தீயணைப்பு துறை அலுவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் செயல் அலுவலர் இசக்கியப்பன், அலுவலக உதவியாளர் பாலகிருஷ்ணன் மற்றும் அலுவலக ஊழியர்கள் செய்து இருந்தனர்.

    நிகழ்ச்சியில் தென் திருப்பேரை சுற்று வட்டார தேவேந்திர குல வேளாளர் 15 கிராம ஊர்களின் ஊர்க் குடும்பர்கள், ஊர்த் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு மரியாதை வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதில் தேவேந்திர குல வேளாளர் ஆன்மீக அறக்கட்டளை தலைவர் ராஜ்குமார், பொருளாளர் மாரி துரைசாமி, துணைத்தலைவர் சவுந்திரராஜன், தம்புரான், தானி ராஜ்குமார், குமார், மேகநாதன், வார்டு உறுப்பினர் குமரேசன் மற்றும் முகில் வண்ணன் கைங்கர்ய சபா தலைவர் சுந்தர்ராஜன் மற்றும் அனந்த கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×