search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கொரோனா குறைந்ததால் பள்ளிகளில் விளையாட்டு போட்டிகளை நடத்த அனுமதி

    ஆர்வமுள்ள மாணவர்கள் என்.சி.சி., என்.எஸ்.எஸ்., சில், சேர்வதுடன் விளையாட்டு போட்டிகளிலும் பங்களிப்பை தரவேண்டும்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் 1,327 பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்  நடந்தது. பெற்றோர், ஆசிரியர், கவுன்சிலர் அடங்கிய 20 உறுப்பினர்களை கொண்டு குழு அமைப்பது, குழு தலைவராக பெண்களுக்கு முன்னுரிமை அளிப்பது, தலைமை ஆசிரியரை குழு உறுப்பினராக சேர்ப்பது, பள்ளி அமைந்திருக்கும் பகுதியில் வசிக்கும் மக்களின் பங்களிப்போடு, நமக்கு நாமே திட்டத்தில் பள்ளியின் தேவைகளை நிறைவேற்றுவது, குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த கூட்டத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் பழனிசாமி வரவேற்றார். முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ்குமார் முன்னிலை வகித்தார். கலெக்டர் வினீத் தலைமை தாங்கி பேசுகையில், பள்ளிக்கு சரியான நேரத்துக்கு வருவதை மாணவர்கள் பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும். அதுவே சிறந்த ஒழுக்கம்.

    காலை தாமதம், பதட்டமின்றி பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினால் ஆசிரியர்கள் சிறப்பாக கற்றுத்தருவர். ஆர்வமுள்ள மாணவர்கள் என்.சி.சி., என்.எஸ்.எஸ்.,சில், சேர்வதுடன் விளையாட்டு போட்டிகளிலும் பங்களிப்பை தரவேண்டும். கொரோனா குறைந்ததால் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் விளையாட்டு போட்டிகளை நடத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.

    கல்வித்துறை இயக்குனர் அறிவுறுத்தலை பின்பற்றி பள்ளிகளில் போட்டிகளை நடத்துங்கள். நஞ்சப்பா பள்ளி சீரமைப்பு பணி மேற்கொள்வது குறித்து தலைமை ஆசிரியர் மற்றும் பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பழமை வாய்ந்த பள்ளி என்பதால், பொதுப்பணித்துறை குழுவினர் மூலம் ஆராய்ந்த பின் பணி துவங்க ஒப்புதல் வழங்கப்படும் என்றார். 

    பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் குழந்தைவேல், வார்டு கவுன்சிலர் திவாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 15 வேலம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பூலுவப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உட்பட பல்வேறு பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது.
    Next Story
    ×