search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    அதிகரிக்கும் சைபர் குற்றங்கள் - பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை

    சில கடைகளில் ‘க்யூ ஆர் கோடு’ வழியாக வாடிக்கையாளர்கள் செலுத்திய பணம் கடைக்காரர்களின் வங்கிக்கணக்கில் பணம் போய் சேரவில்லை.
    திருப்பூர்:

    ஊரடங்கு காலம் டிஜிட்டல் புரட்சிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்தது. அதேசமயம் இணையதளம் வழியாக நடைபெறும் குற்றங்கள் அதிகரித்துவிட்டன.

    திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் இத்தகைய மோசடிகள் அதிக அளவில் நடக்கின்றன. திருப்பூர் பகுதியில் கடைகள் நடத்துவோர் வாடிக்கையாளர்கள் வசதிக்காக செயலி பயன்படுத்துகின்றனர். இதற்கான ‘க்யூ ஆர் கோடு’ ஸ்டிக்கர் கடைகளில் ஒட்டப்பட்டிருக்கும்.

    சில கடைகளில் ‘க்யூ ஆர் கோடு’ வழியாக வாடிக்கையாளர்கள் செலுத்திய பணம் கடைக்காரர்களின் வங்கிக்கணக்கில் பணம் போய் சேரவில்லை. சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வுசெய்தபோது இரவு கடை பூட்டப்பட்ட பின் ‘க்யூஆர் கோடு’ஸ்டிக்கரை மறைத்து அதேபோன்ற மற்றொரு ஸ்டிக்கரை ஒட்டி நூதன முறையில் சிலர் ஈடுபட்டது அம்பலமானது.

    இதுபோல் ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒருவகையில் மோசடியில் ஈடுபடும் கும்பல்கள் பெருகிவிட்டன. குற்றவாளிகளை கண்டறிவதும் சிக்கலானதாகி விடுகிறது. இதற்கு விழிப்புணர்வு என்பது அவசியமானதாக உள்ளது.

    இதுகுறித்து போலீசார் கூறியதாவது:

    முன்னர் படிக்காதவர்கள்தான் ‘சைபர்’ குற்றவாளிகள் பிடியில் சிக்குகின்றனர் என்று சொல்வர். ஆனால் தற்போது படித்தவர்கள் தான் அதிகளவில் ஏமாறுகின்றனர் என்பது நிதர்சனமான உண்மை. சமீப காலமாக கடன் செயலிகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.

    உடனடியாக கடன் கிடைத்துவிடுகிறது என்பதால் இதனை சாமானியர்கள் பலர் நம்புகின்றனர். இது பல பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று தெரிவதில்லை. குறிப்பாக செயலிகளைப் பதிவிறக்கம் செய்ததும் கேமரா, கான்டாக்டஸ், போன் கேலரி போன்றவற்றை பெறுவதற்கான அனுமதி கேட்கும். இதற்கு அனுமதி அளித்தால்தான் அடுத்த கட்டம் நோக்கி நகர முடியும் என்பதால் அனுமதி அளித்துவிடுவர்.

    ‘ஓ.டி.பி.,யை சொல்லுங்க’ என்று கூறி நடைபெறும் மோசடி பிரசித்தம். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், ஏமாறுவோர் தொடர்ந்து ஈடுபட்டுத்தான் வருகின்றனர். ஒருவர் இதில் ஏமாந்தாலும், மோசடி மன்னர்களுக்கு பெருந்தொகை கிடைத்து விடுகிறது.

    ஆன்லைன் நிதி மோசடியும் அதிக அளவில் நடக்கிறது. வாடிக்கையாளர் சேவை மையம் என்று கூறி வரும் அழைப்புகளை பொதுமக்கள் பலர் எளிதாக நம்பி விடுகின்றனர். சமூக வலைதளங்கள் வழியாக பாலியல் மிரட்டல்கள், இன்னொருவர் ஐ.டி.,க்குள் புகுந்து தவறிழைத்தல் போன்ற சம்பவங்களும் அதிக அளவில் நடக்கின்றன.

    சைபர் குற்றங்கள் குறித்து, https://cybercrime.gov.in/ என்ற தேசிய சைபர் கிரைம் இணையதளத்தில் பொதுமக்கள் புகார் செய்ய முடியும். சைபர் கிரைம் போலீசிலும் புகார் அளிக்க இயலும். சைபர் குற்றங்கள் மூலம் பணத்தை இழந்தவர்கள் பலர் ‘இனி பணம் கிடைக்கவா போகுது என்று எண்ணிவிடுகின்றனர்.

    துரிதமாகச் செயல்பட்டால் குற்றவாளிகளைக் கைது செய்வது எளிது. இழந்த பணத்தை மீட்கவும் முடியும். தாமதமாகப் புகார் செய்தால் மீட்பது கடினம். பணத்தை இழந்தது தெரிந்தால் 1930 என்ற எண்ணுக்கு உடனடியாக தொடர்பு கொண்டு புகார் கூற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×