search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    அமர்வதற்கு இடமில்லாமல் வாசகர்கள் அவதி - பூளவாடி நூலகத்திற்கு கூடுதல் கட்டிடம் கட்டப்படுமா?

    நாள்தோறும், பூளவாடி சுற்றுப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான வாசகர்கள், நூலகத்துக்கு வந்து செல்கின்றனர்.
    குடிமங்கலம்:

    குடிமங்கலம் ஒன்றியம் பூளவாடியில், திருப்பூர் மாவட்ட  நூலக ஆணைக்குழுவின் கீழ் கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது. வாடகை கட்டடத்தில் இயங்கி வந்த நூலகத்துக்கு, வாரச்சந்தை அருகே இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு 2006ல், புதிய கட்டடம் கட்டப்பட்டது. கிளை நூலகத்தில் ஆண்டுதோறும் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

    குறிப்புதவி உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் நூற்றுக்கணக்கான நூல்கள் அரசால் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இவ்வாறு 25 ஆயிரத்துக்கும் அதிகமான புத்தகங்கள் தற்போது நூலகத்தில் உள்ளது. இந்நிலையில் பொதுப்பணித்துறையால் 2006ல் கட்டப்பட்ட கட்டிடத்தில், போதிய இடவசதியில்லை.

    மேலும், வாசகர்கள் படிக்கும் அறையிலேயே கழிப்பிடமும் கட்டப்பட்டுள்ளது. தற்போது இந்நூலகத்தில் 2,500க்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர். நாள்தோறும், பூளவாடி சுற்றுப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான வாசகர்கள், நூலகத்துக்கு வந்து செல்கின்றனர்.

    ஆனால் 5 பேருக்கு மேல் உட்கார்ந்து படிக்கும் அளவுக்கு இடம் மற்றும் இருக்கை வசதி இல்லை. இதனால் பல வாசகர்கள், நின்று கொண்டே நாளிதழ்களையும் பிற குறிப்புதவி புத்தகங்களையும் படிக்க வேண்டிய சூழ்நிலை காணப்படுகிறது. போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் குறிப்புதவி நூல்களை பயன்படுத்த வழியில்லை.

    இதுகுறித்து நூலக வாசகர் வட்டத்தினர் கூறுகையில்:

    பூளவாடி கிளை நூலகத்துக்கு கூடுதல் கட்டடம் அவசியமாகியுள்ளது. உறுப்பினர்கள், வாசகர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கூடுதல் கட்டிடம் கட்ட வலியுறுத்தி, பல ஆண்டுகளாக அரசுக்கு மனு கொடுத்து வருகிறோம். கடந்த 2013-ம் ஆண்டு கூடுதல் கட்டிடம் கட்ட, பொதுப்பணித்துறை சார்பில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு பின்னர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    சமீபத்தில் பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரத்திடம், கூடுதல் கட்டிட தேவை குறித்து மனு கொடுத்து, விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார் என்றனர். திருப்பூர் மாவட்ட நூலக ஆணைக்குழு, உடனடியாக கூடுதல் கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க அப்பகுதி வாசகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    Next Story
    ×