search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நஞ்சை உளுந்து சாகுபடி செய்யப்பட்டுள்ளதை கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு.
    X
    நஞ்சை உளுந்து சாகுபடி செய்யப்பட்டுள்ளதை கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு.

    தஞ்சையில் நஞ்சை உளுந்து சாகுபடி திட்டம்

    தஞ்சை மாவட்ட கலெக்டர் முயற்சியால் நஞ்சை உளுந்து சாகுபடி இலக்கை மிஞ்சியது
    தஞ்சாவூர்:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசால் வேளாண்மைத் துறைக்கென 2021-22ம் ஆண்டிற்கான தனி நிதிநிலை அறிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி வேளாண்மைத்துறை பெயரினை வேளாண்மை-உழவர் நலத்துறை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு இயற்கை நிலையான வேளாண்மையை என்ற ஊக்குவித்து வேளாண் வளர்ச்சிக்கு வழிவகுத்து வருகிறது.

    தமிழக விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு 2021-22ம் ஆண்டில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்துவதற்காக ரூ.2,327 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில், 2020-21ம் ஆண்டு சம்பா பருவப் பயிர்களுக்கான அரசின் பயிர்க் காப்பீட்டுக் கட்டண மானியமாக ரூ.1,553.15 கோடி காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. முதலமைச்சர் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார்.

    தஞ்சையில் நஞ்சை உளுந்து திட்டம் குறித்து மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ்ஆலிவர் கூறியதாவது:
    தஞ்சாவூர் மாவட்டத்தில் நெற்பயிர் சாதாரணமாக 4.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படும். ஆனால் இந்த ஆண்டு இதுவரை 5 லட்சத்து 15 ஆயிரத்து 915 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக குறுவை பருவத்தில் 1 லட்சத்து 66 ஆயிரத்து 135 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டது. இது கடந்த 48 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகபட்ச சாகுபடியாகும்.

    இந்த நிலையில் தற்போது தஞ்சை மாவட்டத்தில் சம்பா தாளடி அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து உளுந்து சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் 22 ஆயிரம் ஏக்கரில் உளுந்து சாகுபடி செய்யப்பட்டது. இதில் குறிப்பிட்ட இடங்களில் கோடை நெல் சாகுபடி செய்யப்பட்டாலும் மீதமுள்ள இடங்கள் தரிசாக போடப்பட்டது.

    தஞ்சையில் உளுந்து திட்டம் என்ற திட்டத்தை செயல்படுத்திட முடிவு செய்து அதன்படி உளுந்து சாகுபடி பரப்பளவை அதிகரிக்கும் வகையில் வேளாண்மை துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

    சம்பா, தாளடி அறுவடை ஆன பின்னர் நஞ்சை உளுந்து திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. மண்வளம் பாதுகாத்திடவும் பயிர் சுழற்சி செயல்படுத்தவும் மண்ணில் தழைச்சத்து நிலைநிறுத்தப்பட்டு மண் வளம் அதிகரிக்கும். இந்த ஆண்டு உளுந்து சாகுபடிக்கு முக்கியத்துவம் கொடுத்து வழக்கமான சாகுபடி பரப்பளவை விட கூடுதலாக 37 ஆயிரத்து 500 ஏக்கரில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    இதற்காக விவசாயிகளுக்கு விதை மானியம் மற்றும் நுண்ணுயிர் சத்து உரங்கள் வழங்கப்பட்டன. மேலும் சாகுபடி தொழில்நுட்பங்கள் அடங்கிய புத்தகம் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டது. வட்டார அளவில் இலக்கு பிரிக்கப்பட்டு அதில் வாய்ப்புள்ள கிராமங்கள் கண்டறியப்பட்டு விவசாயிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டது.

    இதற்கான தொடக்க விழா திருவிடைமருதூரில் நடத்தப்பட்டது. 555 கிராமங்களில் இந்த பயிற்சி வகுப்பு அளிக்கப்பட்டது. இதன் பயனாக இந்த ஆண்டு தற்போது வரை 60 ஆயிரம் ஏக்கரில் உளுந்து பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்குப் பின்னர் உளுந்து மற்றும் பயிறு வகை பயிர்கள் தஞ்சை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியால் கூடுதலாக சாகுபடி செய்யப்பட்டு இருப்பது விவசாயிகள் மத்தியில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது என கூறினார்.

    நரசகாயகபுரம் கிராம விவசாயி செல்வம் தெரிவித்ததாவது:- தஞ்சை நஞ்சையில் உளுந்து திட்டம் மூலம் கூடுதல் உளுந்து பயிர் சாகுபடி பரப்பு, பயறு வகை பயிர்களின் அவசியம் மற்றும் முக்கியத்துவம், உற்பத்தியினை அதிகரிக்க தேவையான தொழில்நுட்பம் குறித்த ஆலோசனை வேளாண் அதிகாரிகள் வழங்கினர். 

    வட்டார அளவில் பரப்பு இலக்கு பிரித்தளிக்கப்பட்டு கூடுதல் பயிர் சாகுபடிக்கு தேவையான உயர் விளைச்சல் தரக்கூடிய உளுந்து ரக விதை, நுண்ணுயிர், ரசாயன உரங்கள் மற்றும் தேவையான இடுபொருட்கள், அரசு வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் தனியார் விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. 

    வேளாண் இடுபொருட்கள் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட்டது. இந்த மாதம் தொடக்கத்தில் பெய்த மழையினால் தற்போது பயிர் நிலை நன்றாக உள்ளது. இந்த 60 ஆயிரம் ஏக்கரில் இருந்து 20 ஆயிரம் டன் உளுந்து உற்பத்தி ஆகும் எனவும், இதன் மதிப்பு இன்றைய சந்தை விலையில் ரூ.140 கோடி ஆகும். இதில் கிராமிய பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என கூறினார்.
    Next Story
    ×