என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாராயணசாமி
    X
    நாராயணசாமி

    உக்ரைனில் சிக்கியுள்ளவர்களை விரைவில் மீட்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம்- நாராயணசாமி

    உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை விரைவில் மீட்க மத்திய அரசுக்கு மேலும் அழுத்தம் கொடுப்போம் என்று முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
    புதுச்சேரி:

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. போர் நடக்கும் உக்ரைனில் சிக்கியுள்ள புதுவை மாணவ-மாணவிகளை மீட்க புதுவை அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இந்த நிலையில் குருசுக்குப்பம் அம்பேத்கர் தெருவை சேர்ந்த லீலாதரன் என்பவரது மகன் சேஷாதரன் (வயது 25) என்பவர் உக்ரைனில் மருத்துவம் இறுதியாண்டு படித்து வருகிறார். தற்போது உக்ரைனில் சிக்கியுள்ள அவர் ஹங்கேரி பகுதியில் தங்கியுள்ளார்.

    அவரது வீட்டிற்கு முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., வைத்தியநாதன் எம்.எல்.ஏ., காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று இரவு நேரில் சென்று மாணவரின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் மத்திய அரசிடம் பேசி உக்ரைனில் சிக்கியுள்ள புதுவை மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

    இது குறித்து முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசு தற்போது நடவடிக்கை எடுத்தாலும் உக்ரைன் நாட்டில் இருந்து இந்தியர்கள் வெளியே செல்ல முடியவில்லை. ஹங்கேரி, போலந்து பகுதிக்கு செல்கின்றனர். அங்கிருந்து தான் அவர்கள் மீட்கப்படுகின்றனர். குருசுக்குப்பம் பகுதியை சேர்ந்த மாணவர் சேஷாதரனுடன் 11 புதுவை மாணவர்கள் தங்கியுள்ளனர். புதுவை மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவு துறை மந்திரியிடம் வலியுறுத்த உள்ளோம்.

    இந்தியாவில் உள்ள மாணவர்களை உடனடியாக மீட்க வேண்டும் என்று பிரதமருக்கும், மத்திய மந்திரிகளுக்கும் மேலும் அழுத்தம் கொடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    Next Story
    ×