என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    விபத்தில் அண்ணன் இறந்த சோகத்தில் பிளஸ்-1 மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலை

    அண்ணன் இறந்த சோகத்தில் தங்கை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புது குய்யனூர் வடக்கு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சாமிக்கண்ணு. இவரது மனைவி செல்லமுத்து.

    இவர்களுக்கு ஜீவானந்தம் (19) என்ற மகனும், பவித்ரா (15) என்ற மகளும் இருந்தனர். ஜீவானந்தம் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டும் பவித்ரா சத்தியமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 கம்ப்யூட்டர் சயின்சும் படித்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி ஜீவானந்தம் பவானிசாகர் பகுதியில் நடந்த விபத்தில் இறந்து விட்டார். பவித்ரா அண்ணன் மீது அதிக பாசம் வைத்து இருந்தார். இதனால் அண்ணன் இறந்த துக்கம் தாங்க முடியாமல் அவர் மன வருத்தத்தில் இருந்து வந்தார்.

    இதையடுத்து விபத்தில் இறந்த ஜீவானந்தனுக்கு கடந்த 22-ந் தேதி 15-ம் நாள் காரியம் வீட்டில் நடந்தது.

    இந்த நிலையில் அண்ணன் இறந்த சோகத்தில் மன வேதனையில் இருந்து வந்த பவித்ரா சம்பவத்தன்று இரவு வீட்டில் இருந்த தோட்டத்துக்கு பயன்படுத்தும் களைகொல்லி மருந்தை (வி‌ஷம்) எடுத்து குடித்து விட்டு வாந்தி எடுத்து கொண்டு இருந்தார்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சாமிகண்ணு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பவித்ராவை மீட்டு சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு இருந்து கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பவித்ரா பரிதாபமாக இறந்தார். அண்ணன் இறந்த சோகத்தில் தங்கை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×