search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாமக
    X
    பாமக

    5 மாநகராட்சி வார்டுகளை மட்டுமே பா.ம.க. கைப்பற்றியது

    பேரூராட்சி வார்டுகளில் பா.ம.க. 73 இடங்களில் வெற்றிபெற்றது. அதே நேரத்தில் பா.ஜனதா 230 இடங்களை பேரூராட்சியில் கைப்பற்றி இருந்தது.
    சென்னை:

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க., பா.ஜனதா, அ.ம.மு.க., தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய 6 கட்சிகள் தனித்து போட்டியிட்டன.

    இதில் எதிர்பார்த்ததற்கு மாறாக பா.ஜனதாவும், அ.ம.மு.க.வும் குறிப்பிட்ட இடங்களை கைப்பற்றி அனைத்து கட்சிகளுக்கும் அதிர்ச்சியை கொடுத்தன.

    பா.ம.க. வருகிற சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் ஆட்சி அமைக்க போவதாகவும், அதற்கான பலத்தை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நிரூபித்து காட்டப்போவதாகவும் அறிவித்து தேர்தலை சந்தித்தது. ஆனால் இந்த தேர்தலில் அவர்களது எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை.

    மாநகராட்சி வார்டுகளில் 5 இடங்களை மட்டுமே பா.ம.க.வால் கைப்பற்ற முடிந்தது. காஞ்சிபுரம் மாநகராட்சியில் 2 வார்டுகள் பா.ம.க.வுக்கு கிடைத்தது. கடலூர், ஓசூர், வேலூர் ஆகிய மாநகராட்சிகளில் ஒரு வார்டில் வெற்றிபெற்றது.

    நகராட்சி வார்டுகளில் 48 இடங்களை பா.ம.க. கைப்பற்றியது.

    ஜெயங்கொண்டம், சத்தியமங்கலம், சிதம்பரம், நெல்லிக்குப்பம், விருதாச்சலம், குழித்துறை, இடங்கண சாலை, தாரமங்கலம், திருப்பத்தூர், திருவத்திபுரம், வந்தவாசி, திருவள்ளூர், பெரியகுளம், சீர்காழி, மயிலாடுதுறை, ஆற்காடு, சோளிங்கர், மேல்விசாரம், வாலாஜாபேட்டை, கோட்டக்குப்பம், திண்டிவனம், விழுப்புரம் ஆகிய நகராட்சிகளில் பா.ம.க.வுக்கு இடங்கள் கிடைத்தது.

    ஆனால் பா.ம.க.வை நெருங்கும் அளவுக்கு அ.ம.மு.க. நகராட்சி வார்டுகளில் 33 இடங்களை கைப்பற்றியது.

    பேரூராட்சி வார்டுகளில் பா.ம.க. 73 இடங்களில் வெற்றிபெற்றது. அதே நேரத்தில் பா.ஜனதா 230 இடங்களை பேரூராட்சியில் கைப்பற்றி இருந்தது.

    அரியலூர், ஈரோடு, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, சேலம், தஞ்சாவூர், தர்மபுரி, திருவண்ணாமலை, திருவள்ளூர், நாமக்கல், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, விழுப்புரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பேரூராட்சிகளில் பா.ம.க. வெற்றிபெற்றது.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க.வுக்கு மொத்தம் 126 இடங்கள் கிடைத்தது.

    இந்த தேர்தலில் தனித்து போட்டியிட்டு அதிக இடங்களை கைப்பற்றுவதன் மூலம் சட்டசபை தேர்தலில் தனது செல்வாக்கை உயர்த்தி கொள்ளலாம் என்கிற பா.ம.க.வின் கனவு தகர்ந்து போகும் நிலை உள்ளது.
    Next Story
    ×