என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழந்தை பலி
    X
    குழந்தை பலி

    பிறந்த 2 மணி நேரத்தில் சாக்கடையில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை பலி

    ஈரோடு அருகே பச்சிளம் பெண் குழந்தையை சாக்கடையில் வீசி சென்ற பெண் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு ரெயில் நிலையம் முன்பு உள்ள ஏ.டி.எம். மையம் முன் பகுதியில் உள்ள சாக்கடையில் நேற்று மதியம் தொப்புள் கொடியுடன் ஒரு பெண் குழந்தை கிடந்தது. அந்த வழியாக வந்தவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் ஆம்புலன்சை வரவழைத்தனர். சாக்கடையில் கிடந்த குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். குழந்தை பிறந்து 2 மணி நேரமே இருக்கும் நிலையில் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    இதற்கிடையே ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் குழந்தை மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது. குழந்தையை சாக்கடையில் வீசி சென்ற பெண் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Next Story
    ×